தஞ்சை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் டிரக்டருக்காக வாங்கிய கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களால் அவமான படுத்தபட்டுள்ளார். அதுவும் போலீஸ் துணையுடன்! அடுத்த சில தினங்களில் அரியலுர் மாவட்டத்தில் நிதி நிறுவனத்தால் டிரக்டர் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப்படியே மற்றுமொரு செய்தியை ஒப்பிடுவோம். அரசு வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துவிட்டு இந்தியாவின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான மல்லையாவை காணவில்லை! அவர் தப்பித்து ஒடவில்லை நாட்டைவிட்டு மிக எளிதாக வெளியேறியுள்ளார். உண்மையில் பெரும் நிறுவனங்கள் வைத்துள்ள கடன் பாக்கியால் (Non-Performing Assets) பல வங்கிகள் தடுமாறும் பட்சத்தில், மான்யங்களும் சிறு கடன்கள் தள்ளுபடி செய்வதும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று அரசாங்கமும் பொருளாதார நிபுணர்களும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். நிதி பற்றாகுறை, சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, விலையேற்றம் இப்படியாக சாமானியர்களுக்கு புரியாத வார்த்தை ஜாலங்கள்! சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி அறிக்கையில்கூட கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்ககூடிய பல அறிவிப்புகள். விவசாயம், சிறுதொழிகள், கல்வி, மருத்துவம், வறுமை ஒழிப்பு என்று மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வும் இல்லை. தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. 90-களில் தொடங்கி இதுதான் நிலைமை. மிக சிறிய சதவிததினரின் வளர்ச்சிக்காக பெரும்பாண்மை மக்களின் நலன் பறிக்கொடுக்கபடுகிறது. Definitely, not a case of mis-governance. ஆட்சியாளர்களால் தெரிந்தே அமுல்படுத்தபடுகிறது!
*****
சென்ற வாரம் அலுவல் நிமித்தமாக பெங்களூரு விஜயம். நண்பர் ஒருவர் அங்கிருக்கும் தனது உறவினருக்கு ஒரு சிறிய பார்சல் ஒன்றினை கொடுக்க சொல்லி தந்தார். அவரின் உறவினர் வீடு நான் தங்கிய இடத்திலுருந்து சுமார்
20 கிலோமீட்டர் தூரம். மீண்டும் நான் அங்கிருந்து செல்ல வேண்டிய இடம் கிட்டதட்ட அதே தூரம். இது அவருக்கும் தெரியும். ஆக அவர் கூரியர் செலவை மிச்சம் செய்துவிட்டார் எனக்குதான் கால் டாக்ஸி செலவு கூடியது. அதைவிட இரண்டு மணிநேர கால விரயம்! எழுத்தாளர் சுஜாதா எழுதியது ஞாபகம் வருகிறது - ”அமெரிக்கா பயணம் என்றால் நாம் செல்லும் நகருக்கு சம்மந்தம் இல்லாத ஏதோ ஒரு நகரில் வாழும் பக்கத்து வீட்டுகாரர் பேத்திக்கு ஊறுகாய் பாட்டில் கொண்டு செல்ல தயாராக வேண்டும்.”