Thursday, July 7, 2011

வகுப்பறை சதுரங்கம்

சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதில் ஏன் இத்தனை குழப்பம்? குழந்தைகள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடிகள்? இதற்கான பதில், எல்லோரும் அறிந்த ஒரு எளிய பதில் - தனிமனித ஆணவம்! இந்த அகங்காரத்தினால், தற்பெருமையினால் தமிழகத்தில் ஆக்கபூரவம்மான பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடபடுகின்றன. இது யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இது தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு. நாம் தற்போது அந்த சர்ச்சையை தவிர்ப்போம், மற்றொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விவாதிக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? :)

சமச்சீர் கல்வி தேவையா என்பதில் இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. அதனை எப்படி செயல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் மாற்றுகருத்துக்கள் இருக்கலாம். சொல்லபோனால், பலவிதமான கருத்துக்களை வரவேற்று அவற்றினை விவாதித்து அதன் அடிபடையினில் ஒரு முடிவேடுபதுதான் ஒரு ஜனநாயக அரசின் சரியான அடையாளம். ஆனால், புதிய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே ரத்துசெய்தது. விவகாரத்தை உச்சநீதிமன்றம்வரை எடுத்துசென்றுள்ளது. குழந்தைகள் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் ஒரு விசித்திர நிலையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றினை அமைத்தது. அந்த குழுவிலும் கல்வியாளர்கள் என்ற பெயரில் தனியார் பள்ளி அதிபர்களை, அதுவும் மெட்ரிக் பள்ளி அதிபர்களை நியமித்துள்ளது! இப்படிப்பட்ட ஒரு நிபுணர் குழுவிடம் நடுநிலையான ஓர் செயல்பாட்டினை எதிர்பார்க்கமுடியாது என்றே பரவலாக பேசப்பட்ட கருத்து. அது பொய்க்கவில்லை. ஆக, ஆரம்பம் முதலே சமச்சீர் கல்வி திட்டத்தினை குழி தோண்டி புதைக்கும் ஓர் முயற்சியில் இந்த அரசு இடுபடுகிறது என்ற நடுநிலையான கல்வியாளர்களின் குற்றச்சாட்டு சரி என்றேபடுகிறது.

எல்லோரும் எதிர்பார்த்ததைபோலவே நிபுணர் குழு சமச்சீர் கல்வி திட்டத்திற்க்கு எதிரான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்று அதன் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. அறிக்கையைப்பற்றிய கல்வியாளர்களின் கருத்தினை பார்ப்போம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு:
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்று கூறும் இந்த அறிக்கை, மற்றொரு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமமான ஒன்று என்கிறது. இதுவே ஒரு முரண்பாடான்ன கருத்து. மேலும், இது கிராமபுரங்களில் தமிழ் வழியில் கற்க்கும் மாணவர்களை சிருமைபடுத்தும் செயல். தமிழ் வழியில் கற்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் எந்த வகையிலும் ஆங்கிலவழி கல்வி கற்க்கும் மாணவர்களைவிட கல்வித்திறன் குறைந்தவர்கள் அல்ல.
எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
85% மாணவர்கள் செல்லும் அரசு அல்லது அரசு மான்யம் பெரும் பள்ளிகளுக்கு பிரதிநித்துவம் இல்லை. கிராமப்புற மாணவர்களின் கற்க்கும் திறனை இவர்கள் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. எப்படியிருந்தாலும், மாணவர்களை படிக்க செய்வது ஆசிரியர்களின் வேலை.
உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது குழந்தைகளின் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்று நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார், அதுதான் உண்மையும் கூட.

இந்த கூத்துகளை கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஒரு பெரிய கூட்டமே இத்திட்டத்திற்கு எதிராக வேலை பார்க்கிறது என்பதுதான் அது. அதில், ஆங்கிலவழி பாடம் நடத்தும் பள்ளி முதலாளிகள், படித்த நடுத்தர வர்க்கம் மற்றும் நகரவாசிகள் ஆகியோருக்கு முக்கிய பங்கு என்பது ஊரறிந்த ரகசியம். இதற்கு மேல், இப்பிரச்சனைக்கு ஜாதியும் ஒரு காரணம் என்ற குற்றசாட்டும் உண்டு.

சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் எல்லோருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் ஒரு முறையான கல்விக்கொள்கை இல்லாதது நாம் பலவீனங்களிலேயே மிக பெரிய பலவீனம்.இதனை என்னவென்று சொல்வது?