Saturday, April 9, 2011

லஞ்ச ஒழிப்பும் நடுத்தர வர்க்கமும்

கிராம நிர்வாக அதிகாரி முதல் மத்திய மந்திரி வரை நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் என்பது மிகவும் சாதாரண விஷயம் ஆகிவிட்டது. லஞ்சம் வாங்காத அதிகாரியை அல்லது அரசியல்வாதியை பார்த்துதான் நாம் அதிசியக்கிறோம்.

இப்படிபட்ட ஓரு சூழலில் அன்னா ஹசாரே என்ற ஒரு தனிமனிதர் லஞ்சத்திற்க்கு எதிராக பேசதுவங்கினார். சென்ற வாரம், அவரின் 'சாகும்வரை உண்ணாவிரத' போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகர் வாழ் நடுத்தர மக்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்குகொண்டனர்.

லஞ்சம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட ஒரு பரபரப்பு லஞ்சத்தை ஒழிக்குமா? கண்டிப்பாக ஒழிக்காது!!

வழக்கம்போல் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில செய்திதொலைகாட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவும் கொதித்ததைப்போல் ஒரு தோற்றத்தை உருவாக்கினர்.

இந்த பிரச்சனைக்கு அன்னா ஹசாரேவும் அவரின் ஆதரவாளர்களும் தரும் தீர்வும் சரியல்ல, அதனை தேசத்தின்மேல் திணிக்கும் விதமும் சரியல்ல. இந்த கருத்தினை வலியுறுத்தும் வகையில் பல வலைப்பதிவாளர்கள் அழகாக பதிந்துள்ளனர். என்னுடைய பிரச்சனை அதுவல்ல!

இந்த லஞ்ச ஒழிப்பு போராட்டத்திற்காக வீதிகளில் குவிந்த நடுத்தரவர்க்கத்தின் நேர்மை எந்த அளவு சந்தேகமற்றது? இதுதான் என்னுடைய பிரச்சனை.




ஸபெக்ட்ரம், காமென்வெல்த் போன்றவைதான் லஞ்சஊழல் என்றால், தனிமனிதனை நேரடியாக பாதிக்கும் அடிமட்ட லஞ்சத்தை என்னவென்பது? இதில் நடுத்தரவர்க்கத்தின் பங்கு என்னவென்று எல்லோரும் அறிந்ததே! தங்கள் தனிபட்ட தேவைகளுக்காக அடிமட்டத்தில் லஞ்சத்தை ஆரம்பம் முதல் ஊக்குவிப்பது இந்த வர்க்கம்தான். பொருளாதார தாராளமயமாக்குதலுக்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது.

இரயில் டிக்கட், காஸ சிலிண்டர், மின் இணைப்பு, பிறப்பு/இறப்பு போன்ற சான்தறிதழ்கள் பெறுதல், பள்ளி/கல்லூரி அட்மிஷன்..... இப்படி எல்லாவற்றிலும் வரிசையை தாண்டுவதற்கு அல்லது விதியை மீறுவதற்க்கு லஞ்சத்தை ஆரம்பித்தது நடுத்தரவர்க்கம்தான். மீறுவதற்கு வாங்கியவர்கள் இப்பொழுது சாதாரணமாக செய்யவேண்டியதற்கே கையை நீட்டுகின்றனர். இப்பொழுது விவகாரம் தலைக்குமேல் போய்விட்டது! நேரடி பாதிப்பு அதிகமாகிவிட்டது!! தாங்கமுடியாமல் நடுத்தரவர்க்கம் வீதிகளுக்கு வந்துள்ளது. சுயநலம் என்றுகூட சொல்லாம். ஆனால், பராசக்தி பட வசனம்போல் 'சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது' என்று சமாதானபட்டுகொள்ளலாம்.

சரி, நம்மில் எவ்வளவு பேர் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதிமொழி எடுக்கவும் அதனை தவறாமல் பின்பற்றவும் தயாராக உள்ளோம். அதிகமாக எதிர்பார்க்கிறேனோ?

லஞ்சம் ஓழிக்கப்பட வேண்டுமென்றால், 'அதனை' வாங்குபவர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, 'அதனை' கொடுக்க தயாராக இருக்கும் நம்மிடம் கடுகளவாவது வேண்டும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து.