Thursday, June 5, 2014

பள்ளியில் முதல் நாள்

தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்ப்பட்ட “அம்மா” உணவகங்கள் இம்மாதத்தில் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன் முதல்வர் அறிவித்துள்ளார். இது அடிதட்டு மக்களிடையே பெரும் ஆதரவை பெற்ற ஒரு அருமையான திட்டம். இவ்வுணவகங்களை பார்வையிட்ட எகிப்திய நல்வாழ்வு அமைச்சர் இத்திட்டதினை எகிப்தில் செயல்படுத்துவதை பற்றி பேசியுள்ளார். அந்த ஒரு நோக்கதுடன்தான் அவர் இந்த உணவகங்களுக்கு விஜயம் செய்துள்ளார். அதே தமிழக அரசிடமிருந்து, அடுத்த சில தினங்களில் மற்றுமொரு அறிவிப்பு. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ‘உயர்வகை’ (ELITE) மதுபான கடைகள் திறக்கப்படும், என்பதே அது! குளிரூட்டபட்ட இக்கைடைகள் தற்பொழுது சென்னையில் மிகவும் பிரபலம். வெளிநாட்டிலுருந்து இறக்குமதி செய்யபட்ட மதுவகைகள் விற்கப்படும் இக்கடைகள் அதிநவீன மால்களிலும் பெரிய வணிக வளாகங்களிலும் செயல்படும். இரண்டு அறிவிப்புக்கும் உள்ள வேறுபாடு மலைக்க செய்கிறது! ஒன்று, அடிதட்டு மக்களுக்கு பேருதவியாக உள்ள ஒரு வெகுஜன திட்டம். மற்றொன்று, அதே மக்களின் நல்வாழ்வுடன் விளையாடும் ஒரு நச்சு திட்டம். கோளாறு நம்மிடமா அல்லது அரசியல் செய்பவர்களிடமா?  
                                                     o0O0o

கோடை விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளியிலுருந்து வந்த மகனிடம் முதல் நாள் அனுபவங்கள் பற்றிய சுவாரசியம். பிறகு பிராஜக்ட் பற்றிய பேச்சு. உலக வரைபடத்தில் சில வேலைகள், பிறகு அது லேமினேட் செய்யபட வேண்டும். இப்படியாக பல அறிவுறுத்தல்கள். இந்த பிராஜக்ட்டுகள் விலைக்கு கிடைகின்றன என்பது ஊரறிந்த கதை. மாணவர்களுக்கு பிராஜக்ட்டுகள் என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால், பள்ளி ஆரம்பித்த முதல் நாளேவா?!?