Saturday, August 27, 2011

மரண அரசியல்

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சிலர் குரல் எழுப்புகின்றனர்.

மரண தண்டனை தடை செய்யபடவேண்டும் என்று பல நாடுகளில்லும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பல காலமாக போராடி கொண்டிருகிறார்கள். உலகளவில் சுமார் நூறு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் இதற்காக பலர் குரல் எழுப்பிகொண்டிருகிறார்கள். ஆனால், இப்பொழுது இந்த விஷயத்தில் சிலர் செய்து கொண்டிருக்கும் பிரச்சாரம் மனித உரிமை சம்பந்தபட்டதல்ல. இது அரசியல். இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் செய்யப்படும் அரசியல்.

உண்மையில் யாரும் தண்டனை பெற்றவர்களுக்காக பேசவில்லை. வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்ற மக்கள் செல்வாக்கு இல்லாத அரசியல் தலைவர்களும், நெடுமாறன், சீமான் போன்ற பிரிவினை பேசுபவர்களும் இந்த பிரச்சனையில் குளிர் காய முயற்சிக்கிறார்கள். ஆக சுயநலம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்றால், பாராளுமன்ற தாக்குதலில் தண்டனை பெற்ற அப்சல் குரு, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப் ஆகியோருக்கும் சேர்த்து போராடுவார்களா? தமிழர்களுக்காக மட்டும்தான் போராட்டம் என்றால் கோவையில் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்தியவர்களும் தமிழர்கள்தானே அவர்களுக்காகவும் போராடுவார்களா?

இது போன்ற உணர்சிகரமான பிரச்சனைகளில் இனஉணர்வுகளை தூண்டுவது ஒரு அநாகரிகமான செயல். அதைதான் தமிழ் தேசிய தலைவர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் செய்து கொண்டிருகிறார்கள். இதற்கு பத்திரிகைகளும் தூபம் போடுகின்றன.

போர் குற்றவாளிகள் என்று இலங்கை அதிபர் மற்றும் அவர் சகாக்களை குற்றம் சாட்டுகிறோம் நாம். மற்றவர் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் இவர்களும் குற்றவாளிகள்தானே.