
சென்ற வாரம் அலுவல் நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் பயணம்தான். இரயில் அல்லது பேருந்து நிலையத்திலுருந்து தங்குமிடம் செல்லும் வழியில் அந்த அதிகாலைவேளையில் கண்ணில் முதலில்படுவது சாலையின் இருபுறமும் இருக்கும் நடைபாதைவாசிகள்தான். இதுபோல் கிடைத்த இடத்தில் தங்களை அடக்கிகொள்ளும் மக்களை பார்க்காமல் சென்னையில் சுற்றுவது சிரமம். எல்லா பெரிய நகரங்களிலும் இதுதான் நிலைமை. தினமும் நகரத்திற்கு பிழைப்பு தேடிவருவபர்களால் நாளுக்கு நாள் இப்படிபட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று.
முறையான சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் உணவுதானியங்கள் அழுகி கொண்டிருக்கையில் அந்த உணவிற்காக புலம்பெயர்ந்தவர்கள் இவர்கள். நம் உணவின் ஊட்டச்சத்தினை கணக்கிட்டு உண்ணும் நாம், பசி அடங்கினால் போதும் என்று கிடைத்ததை உண்ணும் இவர்களுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக வசதியானவர்களே!

நகரை செம்மைபடுத்துகிறோம் என்று மாநகராட்சியினால் விரட்டபடுவது, காவல்துறையினரின் கெடுபிடிகள், சமூகவிரோதிகளின் தொந்தரவுகள் போன்ற இம்சைகளையும் மீறி இம்மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். முறையற்று ஓட்டப்படும் வாகனங்களால் உயிரழப்புகளும் அவ்வபொழுது உண்டு.
தற்போது எட்டு சதவீத வளர்ச்சி, அடுத்த ஆண்டு ஒன்பது சதவீத வளர்ச்சியை தொட்டுவிடும் என்கிறார்கள், இருந்தும் இப்படிபட்ட ஒர் நிலை! எதனால்? இதனை சரி செய்வது எப்படி? இந்த கேள்விகளுக்கான ஆராய்ச்சியில் நான் ஈடுபடவில்லை. அதனை, மெத்த படித்த பல அறிஞர்கள் நிறையவே செய்துகொண்டிருகிறார்கள்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதும் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பெற தகுதியவற்றவர்கள் ஆகிறார்கள். இந்நாட்டின் பிரஜை என்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கிறார்கள்.