Sunday, September 25, 2011

சலூனும் கவர்ச்சி காலண்டர்களும்

பொதுவாக அமெரிக்கர்கள் எல்லாவற்றில்லும் அதிக ஆர்பாட்டம் செய்பவர்கள் என்பது அறிந்ததே. ஆனால், 9 / 11 அன்று உயர்யிழந்வர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் மிகவும்   கண்ணியத்துடன், பண்புடன் உணர்ச்சி வயப்படாமல் மிக அமைதியாக அனுசரிக்கப்பட்டது! இதனை நம்மூர் நிலையுடன் ஒப்பிடவும். தலைவர்கள் அல்லது ஹீரோக்கள் பிறந்த நாட்களில் அவர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இதில் இறந்த தலைவர்களின் நினைவு நாள் இன்னும் அதிக கவனம் பெரும். முடிந்த வரையில் அந்த தலைவருக்கு சாதி சாயம் பூசப்பட்டு அவரை சம்பந்தபட்ட சாதியின் தலைவராகவே ஆக்கிவிடுகிறார்கள்! இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விளைவுகளை இரண்டு வாரங்கள் முன் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் கண்டோம். உயிர் பலி, பொருள் சேதம், இரண்டு மாவட்டங்களிலும் ஸ்தம்பித்த அரசு நிர்வாகம்! தேவையா?

****

மங்காத்தா படம் பார்க்க குடும்பத்துடன் Big Cinemas சென்றோம். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின் சினிமா தியேட்டர் பக்கம்! டி.வியிலும் முழு படம் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. கவுண்டரில் இருந்தவர் சில்லறை இல்லாததால் டிக்கெட் இல்லை என்றும் வேறு யாராவது சில்லறை கொண்டு வந்தால் டிக்கெட் தருகிறேன் என்றார். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர் பதில் சொல்லிய  விதம் மற்றும் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்த விதம் அணில் அம்பானியின் வாரிசு டிக்கெட் கொடுத்து கொண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணியது! டிக்கட் மற்றும் இடைவேளையில் வாங்கியவை என்று மொத்தமாக ஐநூறு ரூபாய் மொய் வைக்கப்பட்டது. பஜாரில் திருட்டு சிடி விற்பவர் மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் காரணம் புரிந்தது!

****

நம் திட்ட ஆணையம் (Planning Commission) இந்தியாவில் சராசரியாக ஒரு நபரின் ஒரு நாள் வருமானம் ரூ.38 இருந்தால் உணவு, மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது! சுப்ரீம் கோர்ட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவருக்கு இலவச உணவு தானியம் வழங்குதல் சம்பந்தமாக நடைபெறும் வழக்கு ஒன்றில் இப்படி ஒரு அறிக்கையை ஆணையம் சமர்பித்துள்ளது. அரசாங்கம் பொறுப்பை தட்டி கழிக்கும் ஒரு செயல்.

****

மாதாமாதம் செய்ய வேண்டிய கடமை நிமித்தம் சலூன் பக்கம் சென்றேன். அன்று ஞாயிறு என்பதால் கடையில் சற்று கூட்டம். சிறுது நேர காத்திருப்பு தேவைப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் சமயம் என்பதால் சுற்றிலும் பேச்சு அதை பற்றியே இருந்தது. வழக்கம்போல் எதிலும் கலந்து கொள்ளாமல் வேடிக்கை  பார்த்தேன்! நேரம் போனது தெரியவில்லை. சலூனுக்கு செல்லும் போதெல்லாம் சிறு வயதில் சலூனில் பார்த்த கவர்ச்சி காலண்டர்கள் ஞாபகம் வரும். ஆனால் இன்றுவரை அவை சலூனில் தொங்கியதற்க்கான காரணம் புரியவில்லை!