Friday, December 23, 2011

யாருக்கு சனி பெயர்ச்சி?

திடீர் திருப்பங்களுக்கும் திகைப்பூட்டும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத தமிழக அரசியலில் யாருமே எதிர்பாராத திருப்பம்! சசிகலா மற்றும் அவரது அனைத்து உறவினர்களும் கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றம்!!

பெங்களுரில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில், ஆட்சி மற்றும் கட்சியை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்று செய்திகள். இது கருப்பு-வெள்ளை திரைப்படங்களை ஞாபகப்படுத்துகிறது.

காரணங்கள் எதுவாக வேணுமானாலும் இருக்கட்டும், அது ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால், ஜெயலலிதாவின் அனைத்து தவறுகளுக்கும் சசிகலா குடும்பம்தான் காரணம் என்பது போல் அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், அதனை அனைத்து பத்திரிக்கைகளும் ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம். சசிகலாவின் வெளியேற்றத்தால் இனி தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்.

ஆரம்பம் முதல் ஜெயலலிதாவை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் தமிழக வலதுசாரி லாபியினால் இப்படிப்பட்ட ஒரு பிரசாரம் காலம் காலமாக செய்யப்படுகிறது என்பது பரவலான கருத்து. அதில் உண்மையும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அனுதாபி துக்ளக் சோ இந்த லாபியின் முக்கிய உறுப்பினர். இதுவும் அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளும் இந்துத்வா கொள்கைகள் மீதான அவரின் அதீத பிடிப்பை ஊர்ஜீதம் செய்யும்.

ஆக, இந்த அரசியல் நாடகத்தை புரிந்துகொள்ள ஒரு சில உதாரணங்களை ஆராய்ந்தாலே போதுமானது.

எல்லோரும் குற்றம் சாட்டும் ஊழலை முதலில் எடுத்து கொள்வோம், இது கூட்டு கொள்ளை என்பது ஊரறிந்த உண்மை.

அரசின் கொள்கை முடிவுகளில் (Policy Decisions) சசிகலாவின் பங்கு என்ன? உதாரணமாக சென்ற ஆட்சியில் ஆடு-கோழி பலியிடுதல் தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், எதிர்த்தவர் மீதெல்லாம் தடா, பொடா மற்றும் கஞ்சா வழக்கு, ஒரே இரவில் பல லட்சம் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம்.

இந்த முறையும் பதவிக்கு வந்து சில மாதங்களுக்குள் எவ்வளவு குளறுபடிகள். சமச்சீர் கல்வி தடை, தலைமை செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், மக்கள் நல பணியாளர்கள் பதவி நீக்கம்.

இந்த செயல்களுக்கும் சசிகலா நட்பிற்கும் என்ன தொடர்பு?!?!

இதனை சற்று யோசித்தோம் என்றால் ஒன்று தெளிவாகும். சசிகலாவிடம் இருந்த அதிகார மையம் இப்போது இடம் பெயர்ந்துள்ளது! அவ்வளவே!!

தமிழ் பத்திரிக்கைகள் சசிகலாவின் வெளியேற்றத்தை சனிப்பெயர்ச்சியுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிடுகின்றன! யாருக்கு சனிப்பெயர்ச்சி? ஜெயலலிதாவிற்கா அல்லது அவரை ஆளுமை செய்ய இத்தனை காலம் காத்திருந்த மற்றொரு லாபிக்கா?
 

Sunday, December 18, 2011

ஆன்லைன் ஆண்டவர் அருள்பாலிக்கட்டும்

ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற வலைதளங்களை உபயோகிப்பதில் முன்னனி வகிக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா தன்னுடைய இரண்டு மகள்களும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகுதான் ஃபேஸ்புக்கில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ’எங்களுக்கு தெரியாத பல லட்சம் பேர் எதற்கு எங்களின் தனிப்பட்ட விவகாரங்களை தெரிந்துகொள்ளவேண்டும். அது அர்த்தமற்றது’ என்கிறார். எனவே, குழந்தைகள் இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சரி, பெரியவர்கள் நாம் எந்த அளவு பக்குவத்துடன் இவற்றினை பயன்படுத்துகிறோம்? டன் கணக்கில் நம் சொந்த புகைப்படங்களை அள்ளிவிடுகிறோம்! (மற்றவருக்கு அதனை பார்க்க நேரம் அல்லது பொறுமை இருக்கிறதா என்று நமக்கு கவலை இல்லை) ’தோசை சாப்பிடுகிறேன்’ ‘கை கழுவுகிறேன்’! இப்படியெல்லாம் செய்திகள்!! இவற்றிலெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், தனிப்பட்ட கருத்துக்களை சொல்லும்போது எந்த அளவு மற்றவர்களை நோகடிக்காமல் செயல்படுகிறோம்? இங்குதான் பெரும்பாலானோர் தவறுகிறோம். இறுதியில் முகம் தெரியாதவர்களுடன் மல்லுக்கு நிற்கிறோம்!! மொத்ததில், இந்த சமூக வலைதளங்களின் (Social Networking Sites) தீவிர ரசிகர்கள் இவற்றினை பக்குவத்துடனும் முதிர்ச்சியுடனும் பயன்படுத்த 'ஆன்லைன் ஆண்டவர்' அருள்பாலிக்கட்டும். அருள் எனக்கும் சேர்த்துதான்.


o0O0o


சமச்சீர் கல்வியில் தொடங்கி கடைசியாக அண்ணா நூலக இடமாற்றம் வரை தமிழக அரசின் அனைத்து முடிவுகளும் நீதிமன்ற தலையீட்டினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.  இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதைவிட, தமிழக அரசு இப்படிப்பட்ட தர்மசங்கடங்களை தவிர்க்கலாமே என்றுதான் எண்ண தோன்றுகிறது. ஆனால், நம் முதல்வர் எதிலும் விளைவுகளை யோசிக்காமல் முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்! முதல் நாள் ஒரு முடிவு அது அடுத்த நாள் கோர்ட் உத்தரவினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மாற்றப்படுவது அவர் அரசின் நிரந்தர நிகழ்வு. இது துக்ளக் தர்பாரையும் மிஞ்சுகிறது. முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் முகமது-பின்-துக்ளக்கின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                             o0O0o


இரண்டு தினங்களுக்கு முன் மதுரையில் வழக்கறிஞர்கள் முல்லைபெரியாறு விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக் முக்கிய சாலைகளில் ஊர்வலம் சென்றனர். அப்போது வழியில் வைக்கப்பட்டிருந்த கேரள நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகைகள் ஊர்வலத்தில் சென்றவர்களால் அடித்து நொறுக்கபட்டன. சேதப்படுத்தப்பட்டவை தமிழகத்தை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனதிற்கு சொந்தமானவை. ஆக, நட்டம் அந்த விளம்பர நிறுவனதிற்கும் அனுமதி அளித்த மாநகராட்சிக்கும்தான். அந்த கேரள நிறுவனதிற்கு அல்ல. இப்படி சேம் சைடு கோல் அடிப்பவர்களை நம்பி எப்படி நாம் வழக்குகளை ஒப்படைப்பது? இவர்கள் உணர்ச்சிவயப்பட்டால் சொந்த கட்சிக்காரர்களுக்கே தண்டனை வாங்கி கொடுத்துவிடுவார்களே!!    
                                                                             
                                                                              o0O0o


’ஒய் திஸ் கொலவெறி’. இப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசப்படும் பாடல். நன்றாக உள்ளதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி பாடல் பிரபலமாகிவிட்டது! பாடலின் வெற்றிக்கு அதனை வெளியிட்ட சோனி நிறுவனத்தின் வியாபார திறனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணங்கள் ஒருபுறம் இருக்க, சிலர் இதனை விமர்சிக்கையில் அந்த கால எம்.எஸ்.வி, இளையராஜாவுடன் ஒப்பிடுகிறார்கள். தேவையற்ற ஒப்பீடு. அந்தந்த காலகட்டதிற்க்கு ஏற்ப பாடல்கள் வருகிறது, அவ்வளவே. இதெல்லாம் இருக்கட்டும் எல்லோரும் எம்.எஸ்.வி, இளையராஜா போல் ஆகிவிட்டால் அப்புறம் அவர்களுக்கென்று தனித்துவம் வேண்டாமா?