Friday, December 23, 2011

யாருக்கு சனி பெயர்ச்சி?

திடீர் திருப்பங்களுக்கும் திகைப்பூட்டும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத தமிழக அரசியலில் யாருமே எதிர்பாராத திருப்பம்! சசிகலா மற்றும் அவரது அனைத்து உறவினர்களும் கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றம்!!

பெங்களுரில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில், ஆட்சி மற்றும் கட்சியை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்று செய்திகள். இது கருப்பு-வெள்ளை திரைப்படங்களை ஞாபகப்படுத்துகிறது.

காரணங்கள் எதுவாக வேணுமானாலும் இருக்கட்டும், அது ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால், ஜெயலலிதாவின் அனைத்து தவறுகளுக்கும் சசிகலா குடும்பம்தான் காரணம் என்பது போல் அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், அதனை அனைத்து பத்திரிக்கைகளும் ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம். சசிகலாவின் வெளியேற்றத்தால் இனி தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்.

ஆரம்பம் முதல் ஜெயலலிதாவை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் தமிழக வலதுசாரி லாபியினால் இப்படிப்பட்ட ஒரு பிரசாரம் காலம் காலமாக செய்யப்படுகிறது என்பது பரவலான கருத்து. அதில் உண்மையும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அனுதாபி துக்ளக் சோ இந்த லாபியின் முக்கிய உறுப்பினர். இதுவும் அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளும் இந்துத்வா கொள்கைகள் மீதான அவரின் அதீத பிடிப்பை ஊர்ஜீதம் செய்யும்.

ஆக, இந்த அரசியல் நாடகத்தை புரிந்துகொள்ள ஒரு சில உதாரணங்களை ஆராய்ந்தாலே போதுமானது.

எல்லோரும் குற்றம் சாட்டும் ஊழலை முதலில் எடுத்து கொள்வோம், இது கூட்டு கொள்ளை என்பது ஊரறிந்த உண்மை.

அரசின் கொள்கை முடிவுகளில் (Policy Decisions) சசிகலாவின் பங்கு என்ன? உதாரணமாக சென்ற ஆட்சியில் ஆடு-கோழி பலியிடுதல் தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், எதிர்த்தவர் மீதெல்லாம் தடா, பொடா மற்றும் கஞ்சா வழக்கு, ஒரே இரவில் பல லட்சம் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம்.

இந்த முறையும் பதவிக்கு வந்து சில மாதங்களுக்குள் எவ்வளவு குளறுபடிகள். சமச்சீர் கல்வி தடை, தலைமை செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், மக்கள் நல பணியாளர்கள் பதவி நீக்கம்.

இந்த செயல்களுக்கும் சசிகலா நட்பிற்கும் என்ன தொடர்பு?!?!

இதனை சற்று யோசித்தோம் என்றால் ஒன்று தெளிவாகும். சசிகலாவிடம் இருந்த அதிகார மையம் இப்போது இடம் பெயர்ந்துள்ளது! அவ்வளவே!!

தமிழ் பத்திரிக்கைகள் சசிகலாவின் வெளியேற்றத்தை சனிப்பெயர்ச்சியுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிடுகின்றன! யாருக்கு சனிப்பெயர்ச்சி? ஜெயலலிதாவிற்கா அல்லது அவரை ஆளுமை செய்ய இத்தனை காலம் காத்திருந்த மற்றொரு லாபிக்கா?
 

No comments:

Post a Comment