Friday, May 23, 2014

ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் மான்யம் மற்றும் இலவசம் ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம். படித்த நடுத்தர வர்க்கத்தின் பங்கு இதில் அதிகம். தேர்தலை மனதில் கொண்டு இலவசங்கள் அறிவிக்கபடுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் அனைத்தையும் இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது. வளரும் நாடுகளில் அடிதட்டு மக்களுக்கு சில சலுகைகள் அவசியம். இங்கு அது சரியானவர்களை சென்றடைகிறதா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். வளர்ந்த நாடுகளில்கூட மான்யங்கள் நடைமுறையில் உள்ளன. அடிப்படை கல்வி மற்றும் மருத்துவம் சிறந்த உதாரணங்கள். பெரும்பாலான நாடுகள் இன்றும் இவையிரண்டையும் இலவசமாகவும் தரமாகவும் வழங்குகின்றன. நம்மிடம் பின் தங்கியுள்ள மனிதவள மேம்பாட்டு தேவைகள் ஏராளம். அவை அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் சரியான முறையில் சென்றடைவதற்கான வழிமுறைகளை நாம் ஆராய வேண்டும். அது சரி, சமையல் எரி வாயு மற்றும் டீசல் போன்றவற்றிற்க்கான மான்யம் நீக்கப்பட்டு முழு விலையும் கொடுக்க தயார் என்று இதே சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரம் செய்தால் என்ன?

o0O0o

பள்ளிகளில் அட்மிஷன் சீசன் தொடங்கிவிட்டது. பெற்றோர் ஒரு பக்கம் பள்ளிகளின் தரத்தினை ஆராய்ந்து அலைந்து கொண்டிருகின்றனர். மற்றோரு பக்கம் பள்ளிகள் தங்கள் தனிதன்மையை பறைசாற்றி ‘பிள்ளைப்பிடிக்கும்’ மகத்தான பணியை செவ்வன செய்துகொண்டிருகின்றன. ‘பல ஏக்கர் வளாகம், குளிருட்டப்பட்ட வகுப்பறைகள், நவீன சாதனங்கள், சர்வதேச கல்விமுறை, பன்னாட்டு உணவு’ - இப்படி நீண்ட பட்டியல். இப்படிப்பட்ட பள்ளிகளை ’தி இந்து’ நாளிதழில் ஒரு கட்டுரையாசிரியர் ’ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இதனை அவசியமாக்குகிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் வெறும் கட்டிடங்களும் கருவிகளும் நல்ல கல்வியை தராது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ‘ஃபைவ் ஸ்டார்’ வசதிகள் வளரும் குழந்தைகளிடம் நல்ல பண்புகளை உறுதி செய்யுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. 

No comments:

Post a Comment