Sunday, February 27, 2011

இதயத்துடிப்பு

இதயம் என்பது மனிதனின் முக்கிய உறுப்புக்களில் ஒன்று என்பது அறிந்ததே. அது செயல்படும் முறை மிகவும் துல்லியமானது என்பதும் அறிந்ததே.

இதயம் பற்றிய அடிப்படை தகவல்களை மிகவும் எளிமையாக புகழ்பெற்ற இருதய நிபுனர் டாக்டர் கே.எம்.செரியன் அவரது வலைப்பதிவில் பதிந்துள்ளார்.

அதன் தமிழாக்கம்...
(இந்த மொழிபெயர்ப்பு அவரின் ஒப்புதலுடன் தரப்பட்டுள்ளது)


1. இதயம் எப்படி இயங்குகிறது?
  • இதயம் ஒர் நிமிடத்திற்க்கு 70 - 80 முறை துடிக்கின்றது. நாள் ஒன்றுக்கு 1,00,000 முறை.
  • அது நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்பகுதியில் அட்ரியா (Atria) எனப்படும் இரண்டு அறைகள். கீழே வென்ட்ரிக்ல்ஸ (Ventricles) எனப்படும் இரண்டு அறைகள்.
  • உடலில் உள்ள அனைத்துப் பாகங்களில் இருந்தும் அசுத்த இரத்தமானது இதயத்தின் வலப்பகுதிக்கு வருகின்றது. இதயத்தின் இடப்பகுதி நுரையீரலில் (Lungs) இருந்து சுத்தப்படுத்தப்பட்ட இரத்தத்தினை பெற்று உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.
  • இதயத்தின் வலப்புறமும் இடப்புறமும் செப்டம் (Septum) என்றழைக்கப்படும் தடுப்பினால் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இரத்த ஓட்டம் பின்வாங்குவதை (Back Flow) தவிர்க்க இதயத்தில் நான்கு வால்வுகள் (Valves) உள்ளன.
  • இரண்டு முக்கிய இரத்த நாடிகள் (Blood Vessels) உள்ளன. ஒன்று, இதயத்தின் வலப்பகுதியில் இருந்து நுரையீரலுக்கு அசுத்த இரத்தத்தினை கொண்டு செல்கிறது. மற்றொன்று, இதயத்தின் இடப்பகுதில் இருந்து சுத்தமான இரத்தத்தினை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.
  • இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்த நாடிகள் இதய நாடிகள் (Coronary Arteries) என்றழைக்கப்படுகின்றன.

2. உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றால் என்ன? அதற்கு என்ன சிகிச்சை முறை?
  • மிக சிறிய நாடிகள் இறுக்கமாகுவதால் ஏற்படுவது உயர் இரத்த அழுத்தம்.
  • உப்பு குறைவான உணவுமுறை, முறையான உடற்பயிற்சி, மனஅழுத்தத்தை கட்டுபடுத்துதல் மற்றும் சரியான உடல் எடை மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.
  • மேற்கூறியவற்றால் இரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

3. இரத்த கொழுப்பு (Cholesterol) என்றால் என்ன?
  • இரத்த கொழுப்பு என்பது கல்லீரலில் (Liver) உற்பத்தியாகும் ஒரு வகையான கொழுப்பு சத்து(Fat). இது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் காணப்படும்.
  • கொழுப்பு சத்து இரண்டு வகைப்படும் - பூரிதக் கொழுப்பு (Saturated) & அபூரிதக் கொழுப்பு (Unsaturated).
  • இதில் பூரிதக் கொழுப்பு அதிக தீங்கானது. இது மாமிசம், பால் மற்றும் முட்டை போன்ற உணவு வகைகளில் காணப்படுகிறது. பூரிதக் கொழுப்பு நமது நாடிகளை அடைக்க செய்யவதுடன் மொத்த கொழுப்பு மற்றும் LDL அளவினை அதிகரிக்க செய்யும். கூடியவரை இவற்றை தவிர்க்கவும்.
  • கொழுப்பு புரதம் (Lipoproteins) கொழுப்பினை இரத்த ஓட்டத்தில் சுமந்து செல்கிறது.
  • இரண்டு முக்கிய கொழுப்பு புரதங்கள் - எச்.டீ.எல் (HDL) மற்றும் எல்.டீ.எல் (LDL).
  • இவற்றில் HDL நலம் பயக்கும் ஒன்று. LDL கெடுதல் விளைவிக்ககூடிய ஒன்று.
  • ஆலிவ் எண்ணெய் (Olive Oil) மற்றும் சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil) ஆகியவற்றில் HDL காணப்படுகிறது. (இவற்றில் LDL குறைவாக இருக்கும்)

4. நாடி-உட்படிவு (Atherosclerosis) என்றால் என்ன?
  • நாடி-உட்படிவு என்பது இரத்தக் கொழுப்பு மற்றும் இதர கொழுப்பு சத்துகள், சுண்ணாம்புச்சத்து (Calcium) மற்றும் இரத்தக் கட்டிகளுடன் (Blood Clot) சேர்ந்து நாடிகளுக்குள் படிதல்.

5. அடைப்பட்ட நாடிகளுக்கு மாற்று-வழி இணைப்பறுவை (Bypass Surgery) அல்லாத வேறு சிகிச்சை முறைகள் என்ன?

மாரடைப்பு அபாயத்தினை தடுக்க கடுமையாக சுருங்கிய இதய நாடிகளுக்கு சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சை அல்லாத வேறு சிகிச்சை முறைகள்:
  • குருதிக்குழாய்ச் சீரமைப்பு (Angioplasty) - காற்றூட்டபட்ட பை (Balloon) மூலம் சுருங்கிய இரத்த நாடியினை அகட்டுவது (Dilatation).
  • ஸட்ன்ட் (Stent) - குருதிக்குழாய்ச் சீரமைப்புக்கு பின், நாடி சுருங்கிய பகுதியில் வலைக்கண் (Mesh) அல்லது சுருள் (Spring) போன்ற உலோக சாதனம் பொருத்துதல். இது நாடி குலைவதை தடுக்கிறது.

6. குருதி ஊட்டக்குறை (Arrhythmia) என்றால் என்ன?
  • குருதி ஊட்டக்குறை என்பது இதயத்தின் மின் செயற்பாடு குழம்புவதால் ஏற்படும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்.

7. மின் உடலியங்கியல் ஆய்வு (Electro Physiology Study - EPS) என்றால் என்ன?
  • மின் உடலியங்கியல் ஆய்வு என்பது இதய கேத்தடரைசேக்ஷன் நுட்பம் (Cardiac Catheterization Technique) மூலம் குருதி ஊட்டக்குறை உள்ள நோயாளிகளை பரிசோதித்தல்.

8. அலைவரிசை மூலம் உறுப்பு-நீக்கம் (Radio Frequency Ablation - RFA) என்றால் என்ன?
  • அலைவரிசை மூலம் உறுப்பு-நீக்கம் என்பது குருதி ஊட்டக்குறைக்கான குறுக்கிட்டு (Interventional) சிகிச்சைமுறை.

9. இதய முடுக்கி (Pacemaker) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
  • இதய முடுக்கி என்பது இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி. மேலும், இதயத்தில் மின்துடிப்புகளை உண்டுபண்ணுதல் மூலம் இரத்தம் சீராக மற்ற பகுதிகளுக்கு வெளியேற (Pump) செய்கிறது.

10. இதய இரத்த குழாய் வரவி (Coronary Angiography) என்றால் என்ன?
  • இதய இரத்த குழாய் வரவி என்பது இதயத்தின் இரத்த வரத்தினை ஆய்வதற்காக செய்யப்படும் ஓர் நோய் கண்டறியும் சோதனை (Diagnostic Test) . இந்த சோதனைக்காக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்ச்சியின்மை (Local Anaesthesia) ஏற்படுத்தப்படுகிறது.
  • தொடை அல்லது கையில் உள்ள இரத்த நாடி ஒன்றில் சிறிய குழாய் (Catheter)செருகப்படுகிறது. இதன் மூலம் இதய நாடிக்குள் சாயம் செலுத்தப்படும்.

11. பிறவி இதய நோய் (Congenital Heart Disease) என்றால் என்ன?

பிறவி இதய நோய் என்பது பிறக்கும்பொழுது இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை குறிப்பிடுகிறது.
  • இதய அறைகளுக்கு இடையே உள்ள தடுப்பினில் (செப்டம்) உள்ள துளைகள்.
  • சுருங்கிய வால்வுகள் அல்லது இரத்த நாடிகள்.
  • இதயத்துடன் இணைந்த இரத்த நாடிகள் சரியான இடத்தில் இல்லாதது.

12. இதய முணுமுணுப்பு (Heart Murmur) என்றால் என்ன?
  • இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் பொழுது சாதரணமாக லப்-டப் என்று ஓலி எழுப்பும். இந்த ஒலி, இதற்கான கருவி (Stethoscope) மூலம் மருத்துவர்களால் கேட்கப்படும்.
  • இதைத்தவிர வேறு மிகையாக கேட்கப்படும் ஒலி, இதய முணுமுணுப்பு என்றழைக்கபடுகிறது.
  • எல்லா இதய முணுமுணுப்புக்களுக்கும் சிகிச்சை தேவையில்லை.

13. கார்டியாக் கேத்தடரைசேக்ஷன் (Cardiac Catheterization) என்றால் என்ன?
  • கார்டியாக் கேத்தடரைசேக்ஷன் என்பது இரத்த நாடி அல்லது நரம்பு மூலம் மிக நுண்ணிய குழாயினை (Catheter) இதய அறைகளுக்குள் செருகுதல் (பொதுவாக மேற்பகுதியில்). இதில், இரத்த மாதிரிகள் மற்றும் இரத்த அழுத்த அளவுகள் நேரடியாக இதய அறைகளில் எடுக்கமுடிவதால் நோயை துல்லியமாக கண்டறியமுடிகிறது.

14. இதய நோயிற்கான முக்கிய அபாயகர காரணிகள் (Risk Factors) என்ன?
  • புகைப்பிடித்தல், அதீத கொழுப்பு சத்து, அதீத இரத்த அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, பருத்த சரீரம் (Obesity), சர்க்கரை நோய், முதுமை, ஆணினம் மற்றும் குடும்ப மரபு (Heredity). பெண்களுக்கு மாதவிடாய் நின்றப்பின்.

15. இதய எதிரொலிப் படம் (Echocardiogram) என்றால் என்ன?
  • இதய எதிரொலிப் படம் என்பது வலியற்ற, துளையிடுதல்-இல்லாத (Non-invasive) ஒர் சோதனை. இது ஊடொலி (Ultrasound) மூலம் இதயத்தின் கட்டமைப்பு (Structure) மற்றும் செயலினை ஆராய்கிறது.

16. மன அழுத்த பரிசோதனை (Stress Test) என்றால் என்ன?
  • மன அழுத்த பரிசோதனை என்பது இதய நாடி நோயினை (Coronary Artery Disease) கண்டறியும் பரிசோதனை.
  • நடைபயிற்சிக்கான இயந்திரத்தில் (Tread Mill) நடக்கவிடப்பட்டு, ஈசிஜீ(ECG), இரத்த அழுத்தம் (BP) மற்றும் இதய துடிப்பு (Heart Rate) தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

17. தாலியம் மன அழுத்த பரிசோதனை (Thallium Stress Test) என்றால் என்ன?
  • தாலியம் மன அழுத்த பரிசோதனை என்பது ஒருவகையான அணுச்சோதனை (Nuclear Test). நாடியில் இரத்த ஓட்டத்தை தெளிவாக பார்ப்பதற்கு கதிரவீச்சு தன்மைகொண்ட பொருள் (Radioactive Substance) இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படும்.
  • மருத்துவர்கள், இதய தசைப்பகுதிகளுக்கு இரத்தம் குறைவாக வருதல், அவை சேதமடைந்த நிலை அல்லது உயிரற்று இருத்தல் போன்றவற்றை பார்க்கலாம்.

18. ஈஈசிபி (Enhanced External Counter Pulsation) என்றால் என்ன?
  • ஈஈசிபி என்பது இதய நோயாளிகளுக்கு துளையிடுதல்-இல்லாத ஓரு புதுமையான சிகிச்சைமுறை.

19. ஸபைக்மோகார் (Sphygmocor)என்றால் என்ன?
  • மத்திய பெருந்தமனியின் இரத்த அழுத்தம் (Central Aortic Blood Pressure) மற்றும் மத்திய நாடிகளின் விறைப்பு (Central Arteries' Stiffness) ஆகியவற்றை துளையிடுதல்-இல்லாமல் அளக்கும் முறை. இது, இதய நாடி நோய் பாதித்த நபர்களுக்கான ஓர் பரிசோதனை.




No comments:

Post a Comment