குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வர் பொறுப்பேற்று பத்தாண்டுகள் ஆகிறது. இந்த 'சாதனை'யை அவரது ஆதரவாளர்கள் பெருமையுடன் பறைசாற்றி கொண்டிருகிறார்கள்! இந்தியாவிலேயே மிக 'திறமை'யான முதல்வர் அவர்தான் என்கிறார்கள்!! தொடர்ந்து பத்தாண்டுகள் முதல்வராய் இருப்பது ஒரு சாதனைதான். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் அரசாங்கம் செய்த ஒரு காரியம் அவரின் திறமையை சந்தேகிக்க வைக்கிறது - குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அதற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்ட சஞ்சீவ் பட் என்ற போலீஸ் அதிகாரியின் கைது. இந்த கைது சம்பவத்தைவிட அதற்கான காரணம்தான் மோடி அரசின் திறமையை குறைக்கிறது! அந்த அதிகாரி அவருக்கு கீழ் பணிபுரிந்த காவலர் ஒருவரை மிரட்டி தனக்கு சாதகமாக வாக்குமூலம் வாங்கினார் என்ற குற்றசாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்படியும் அந்த அதிகாரி ஜாமீனில் வந்துவிடுவார். கைது செய்து என்ன பயன்? மோடியை பாரதீய ஜனதாவின் தோழமை கட்சிகளின் முதல்வர்களே அவர்களின் மாநிலத்தில் நுழைய அனுமதி மறுக்கும்போது தன் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நம் ‘தைரியலெட்சுமி’ தமிழக முதல்வரிடம் அவர் யோசனை கேட்டிருக்கலாம். இந்நேரம் அந்த அதிகாரி மீது கஞ்சா வழக்கு அல்லது குண்டர் தடுப்பு சட்டம், முடிந்தால் இரண்டும் சேர்ந்தே பாய்ந்து இருக்கும்.
*****
சென்ற வாரம் திருநெல்வேலி விஜயம். வேலை முடித்து திரும்பும் வழியில் சாத்தூரில் மதிய உணவிற்காக நிறுத்தினோம். எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று நாங்களே அனுமானித்து ஒரு ஓட்டலில் நுழைந்தோம். அப்போது மணி சுமார் நான்கு. மாலை சிற்றுண்டிக்கான நேரம். ஓட்டலில் திரும்பிய பக்கமெல்லாம் வடையும் ஆவி பறக்க டிக்காஷன் காபியும். அநேகமாக பலருக்கு அது ஒரு தினசரி கடமைப்போலும். ஓட்டலில் கவனத்தை கவர்ந்த மற்றுமொரு விஷயம் ஃபேமிலி ரூம்! நாங்கள் சென்ற சமயம் ஃபேமிலி ரூமில் ஒரு குடும்பம் இரு குழந்தைகள் சகிதம் உணவு அருந்தி கொண்டிருந்தது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் வாடிக்கையாக செல்லும் அசைவ ஓட்டல் ஒன்றில் இதே போல் ஐந்து ஃபேமிலி ரூம்கள் உண்டு. ஆனால், ஒரு நாள்கூட அதில் ஃபேமிலிக்களை பார்த்ததில்லை! எப்பொழுது சென்றாலும் எல்லா ரூம்களிலும் நான்கைந்து பேர் மது அருந்தி கொண்டிருப்பார்கள்!! ஓட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கவனித்துவிடுவதால் ’குடி’மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நிம்மதியாகவும் செளகரியமாகவும் அவர்கள் காரியத்தை முடித்து கொள்ளலாம். நானும் நண்பர்கள் சகிதம் அடிக்கடி அங்கு செல்வது அந்த ஒரு ’திருப்பணி’க்காகதான். இப்போதெல்லாம் தெருமுனை ஒயின் ஷாப் முதல் நட்சத்திர ஓட்டல்வரை மது அருந்துவதற்கான இடம் மற்றும் இதர வசதிகள் பெருகிவிட்டது. அதனால் அசைவ ஓட்டல்களில் ஃபேமிலி ரூம்களுக்கான தேவை குறைந்துவிட்டதா அல்லது பயன்பாடு மாறிவிட்டதா?!?
No comments:
Post a Comment