Friday, December 23, 2011

யாருக்கு சனி பெயர்ச்சி?

திடீர் திருப்பங்களுக்கும் திகைப்பூட்டும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாத தமிழக அரசியலில் யாருமே எதிர்பாராத திருப்பம்! சசிகலா மற்றும் அவரது அனைத்து உறவினர்களும் கட்சி மற்றும் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றம்!!

பெங்களுரில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில், ஆட்சி மற்றும் கட்சியை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்ற திட்டமிட்டதாகவும், அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்று செய்திகள். இது கருப்பு-வெள்ளை திரைப்படங்களை ஞாபகப்படுத்துகிறது.

காரணங்கள் எதுவாக வேணுமானாலும் இருக்கட்டும், அது ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால், ஜெயலலிதாவின் அனைத்து தவறுகளுக்கும் சசிகலா குடும்பம்தான் காரணம் என்பது போல் அவரின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், அதனை அனைத்து பத்திரிக்கைகளும் ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம். சசிகலாவின் வெளியேற்றத்தால் இனி தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்.

ஆரம்பம் முதல் ஜெயலலிதாவை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வரும் தமிழக வலதுசாரி லாபியினால் இப்படிப்பட்ட ஒரு பிரசாரம் காலம் காலமாக செய்யப்படுகிறது என்பது பரவலான கருத்து. அதில் உண்மையும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அனுதாபி துக்ளக் சோ இந்த லாபியின் முக்கிய உறுப்பினர். இதுவும் அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளும் இந்துத்வா கொள்கைகள் மீதான அவரின் அதீத பிடிப்பை ஊர்ஜீதம் செய்யும்.

ஆக, இந்த அரசியல் நாடகத்தை புரிந்துகொள்ள ஒரு சில உதாரணங்களை ஆராய்ந்தாலே போதுமானது.

எல்லோரும் குற்றம் சாட்டும் ஊழலை முதலில் எடுத்து கொள்வோம், இது கூட்டு கொள்ளை என்பது ஊரறிந்த உண்மை.

அரசின் கொள்கை முடிவுகளில் (Policy Decisions) சசிகலாவின் பங்கு என்ன? உதாரணமாக சென்ற ஆட்சியில் ஆடு-கோழி பலியிடுதல் தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், எதிர்த்தவர் மீதெல்லாம் தடா, பொடா மற்றும் கஞ்சா வழக்கு, ஒரே இரவில் பல லட்சம் அரசு ஊழியர்கள் பதவி நீக்கம்.

இந்த முறையும் பதவிக்கு வந்து சில மாதங்களுக்குள் எவ்வளவு குளறுபடிகள். சமச்சீர் கல்வி தடை, தலைமை செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், மக்கள் நல பணியாளர்கள் பதவி நீக்கம்.

இந்த செயல்களுக்கும் சசிகலா நட்பிற்கும் என்ன தொடர்பு?!?!

இதனை சற்று யோசித்தோம் என்றால் ஒன்று தெளிவாகும். சசிகலாவிடம் இருந்த அதிகார மையம் இப்போது இடம் பெயர்ந்துள்ளது! அவ்வளவே!!

தமிழ் பத்திரிக்கைகள் சசிகலாவின் வெளியேற்றத்தை சனிப்பெயர்ச்சியுடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிடுகின்றன! யாருக்கு சனிப்பெயர்ச்சி? ஜெயலலிதாவிற்கா அல்லது அவரை ஆளுமை செய்ய இத்தனை காலம் காத்திருந்த மற்றொரு லாபிக்கா?
 

Sunday, December 18, 2011

ஆன்லைன் ஆண்டவர் அருள்பாலிக்கட்டும்

ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற வலைதளங்களை உபயோகிப்பதில் முன்னனி வகிக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா தன்னுடைய இரண்டு மகள்களும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகுதான் ஃபேஸ்புக்கில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ’எங்களுக்கு தெரியாத பல லட்சம் பேர் எதற்கு எங்களின் தனிப்பட்ட விவகாரங்களை தெரிந்துகொள்ளவேண்டும். அது அர்த்தமற்றது’ என்கிறார். எனவே, குழந்தைகள் இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சரி, பெரியவர்கள் நாம் எந்த அளவு பக்குவத்துடன் இவற்றினை பயன்படுத்துகிறோம்? டன் கணக்கில் நம் சொந்த புகைப்படங்களை அள்ளிவிடுகிறோம்! (மற்றவருக்கு அதனை பார்க்க நேரம் அல்லது பொறுமை இருக்கிறதா என்று நமக்கு கவலை இல்லை) ’தோசை சாப்பிடுகிறேன்’ ‘கை கழுவுகிறேன்’! இப்படியெல்லாம் செய்திகள்!! இவற்றிலெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், தனிப்பட்ட கருத்துக்களை சொல்லும்போது எந்த அளவு மற்றவர்களை நோகடிக்காமல் செயல்படுகிறோம்? இங்குதான் பெரும்பாலானோர் தவறுகிறோம். இறுதியில் முகம் தெரியாதவர்களுடன் மல்லுக்கு நிற்கிறோம்!! மொத்ததில், இந்த சமூக வலைதளங்களின் (Social Networking Sites) தீவிர ரசிகர்கள் இவற்றினை பக்குவத்துடனும் முதிர்ச்சியுடனும் பயன்படுத்த 'ஆன்லைன் ஆண்டவர்' அருள்பாலிக்கட்டும். அருள் எனக்கும் சேர்த்துதான்.


o0O0o


சமச்சீர் கல்வியில் தொடங்கி கடைசியாக அண்ணா நூலக இடமாற்றம் வரை தமிழக அரசின் அனைத்து முடிவுகளும் நீதிமன்ற தலையீட்டினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லது மாற்றப்பட்டுள்ளது.  இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதைவிட, தமிழக அரசு இப்படிப்பட்ட தர்மசங்கடங்களை தவிர்க்கலாமே என்றுதான் எண்ண தோன்றுகிறது. ஆனால், நம் முதல்வர் எதிலும் விளைவுகளை யோசிக்காமல் முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்! முதல் நாள் ஒரு முடிவு அது அடுத்த நாள் கோர்ட் உத்தரவினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மாற்றப்படுவது அவர் அரசின் நிரந்தர நிகழ்வு. இது துக்ளக் தர்பாரையும் மிஞ்சுகிறது. முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் முகமது-பின்-துக்ளக்கின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                                             o0O0o


இரண்டு தினங்களுக்கு முன் மதுரையில் வழக்கறிஞர்கள் முல்லைபெரியாறு விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக் முக்கிய சாலைகளில் ஊர்வலம் சென்றனர். அப்போது வழியில் வைக்கப்பட்டிருந்த கேரள நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகைகள் ஊர்வலத்தில் சென்றவர்களால் அடித்து நொறுக்கபட்டன. சேதப்படுத்தப்பட்டவை தமிழகத்தை சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனதிற்கு சொந்தமானவை. ஆக, நட்டம் அந்த விளம்பர நிறுவனதிற்கும் அனுமதி அளித்த மாநகராட்சிக்கும்தான். அந்த கேரள நிறுவனதிற்கு அல்ல. இப்படி சேம் சைடு கோல் அடிப்பவர்களை நம்பி எப்படி நாம் வழக்குகளை ஒப்படைப்பது? இவர்கள் உணர்ச்சிவயப்பட்டால் சொந்த கட்சிக்காரர்களுக்கே தண்டனை வாங்கி கொடுத்துவிடுவார்களே!!    
                                                                             
                                                                              o0O0o


’ஒய் திஸ் கொலவெறி’. இப்போது எங்கு பார்த்தாலும் பரபரப்பாக பேசப்படும் பாடல். நன்றாக உள்ளதா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி பாடல் பிரபலமாகிவிட்டது! பாடலின் வெற்றிக்கு அதனை வெளியிட்ட சோனி நிறுவனத்தின் வியாபார திறனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணங்கள் ஒருபுறம் இருக்க, சிலர் இதனை விமர்சிக்கையில் அந்த கால எம்.எஸ்.வி, இளையராஜாவுடன் ஒப்பிடுகிறார்கள். தேவையற்ற ஒப்பீடு. அந்தந்த காலகட்டதிற்க்கு ஏற்ப பாடல்கள் வருகிறது, அவ்வளவே. இதெல்லாம் இருக்கட்டும் எல்லோரும் எம்.எஸ்.வி, இளையராஜா போல் ஆகிவிட்டால் அப்புறம் அவர்களுக்கென்று தனித்துவம் வேண்டாமா?    

Monday, November 7, 2011

நீரிழிவும் இருதய நோயும்

பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் அவருடைய வலைத்தளத்தில் நீரிழிவும் இருதய நோயும் - ஆபத்துக்கள் மற்றும் சிகிச்சை முறைகள் (Diabetes and Heart Disease - Risks and Treatment Options) என்ற தலைப்பில் மிக அருமையான பதிவு ஒன்றினை தந்துள்ளார்.

இந்த பதிவில், நீரிழிவு அதாவது சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இருதயம் பாதிக்கபடுவதற்கான வாய்ப்புகளும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் மிகவும் எளிமையாக பதிந்துள்ளார்.

அந்த பதிவின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. (இது அவரின் ஒப்புதலுடன் செய்யப்பட்டுள்ளது)


*****


நீரிழிவும் இருதய நோயும் - ஆபத்துக்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டவருக்கு மாரடைப்பு (Heart Attack) வருவதற்கான அபாயம் அந்நோய் இல்லாதவரைவிட இரண்டு மடங்கு அதிகம்.

நீரிழிவு இல்லாதவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் (Stroke) வரும் வயதினைவிட நீரிழிவு உள்ளவருக்கு குறைந்த வயதில் அந்நோய்கள் வருவதற்கான அபாயம் உள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு முறை மாரடைப்பு வந்திருந்தால், மேலும் அது இரண்டாம் முறை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீரிழிவு நோயானது நாடி-உட்படிவுகளை (Atherosclerosis) ஏற்படுத்தும். எப்படி?

அதிகப்படியான இரத்த பழச்சர்க்கரை (Blood Glucose) -> இரத்த குழாயில் கொழுப்பு (Cholesterol) அதிகமாக சேர்வதற்கான அபாயம் -> இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பு -> நாடி-உட்படிவுகள்

இதனை தவிர்ப்பது அல்லது காலதாமதம் செய்வது எப்படி?

1. ஆரோக்கியமான இருதயத்திற்கு தேவையான உணவுமுறையினை கடைப்பிடிப்பது என்பதுதான் முதன்மையானது மற்றும் மிக முக்கியமானதும்கூட.

  • நார் (Fiber) சத்து நிறைந்த உணவு
  • இரத்த கொழுப்பினை (Cholesterol) குறைத்தல்
  • பூரிதக் கொழுப்பினை (Saturated Fat) குறைத்தல்
  • ட்ராண்ஸ் ஃபட் (Trans Fat) குறைத்தல்
  • புரத சத்து (Protein) நிறைந்த உணவு

2. சரியான உடற்பயிற்சி மூலம் உடல் நலத் தகுதியினை (Physical Fitness) பேணுதல்.

3. மன அழுத்தத்தை நீக்குதல் (De-stress).

4. புகை பிடித்தல் கண்டிப்பாக கூடாது.

5. சரியான மருத்துவத்திற்கு இருதய சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறுதல்.

6. A1C பரிசோதனை அடிக்கடி செய்துகொள்ளுதல். (கொழுப்பு மற்றும் இரத்த பழச்சர்க்கரை கட்டுக்குள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திகொள்ள).

மேலும், இது சம்மந்தமாக எடுத்துகொண்டிருக்கும் சிகிச்சைகள் முறையாக உள்ளன என்பதனை ஊர்ஜிதப்படுத்திகொள்ளவும் தவறாமல் இப்பரிசோதனையை செய்துகொள்வது அவசியம்.


http://frontierlifeline.wordpress.com/

Sunday, October 23, 2011

சாமானியனின் பொருளாதாரமும் ஜனநாயகமும்

இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த 63 ஆண்டுகளில் அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறிப்பிடதக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது உண்மைதான்.

ஆனால், பொருளாதார தாராளமயமாக்குதலுக்கு (Economic Liberalization) பின் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியானது சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களை முழுதுமாக சென்றடையவில்லை. இந்த வளர்ச்சி நடுத்தர மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் கணிசமான வறுமையை மறைக்கவும் செய்கிறது.

உலக வங்கி கணக்குப்படி நம் மக்கள் தொகையில் 42% வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்றனர். வேலை வாய்ப்பு என்று வரும்போது முறைசாரா துறையில்தான் (Unorganized Sector) 92% பணியாற்றுகிறார்கள்.  ஆக, தரமற்ற வேலை வாய்ப்பினால் வேலையிண்மையைவிட வறுமை அதிகம் உள்ளது.

மனித மேம்பாட்டு குறீயிடு (Human Development Index) பட்டியலில்169 நாடுகளில் இந்தியா 119-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அடிப்படை மருத்துவம் மற்றும் கல்வி வசதியில் இந்தியா மிகவும் பின் தங்கிய்ள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 46% ஊட்டச்சத்து குறைவுடன் உள்ளன.  கர்ப்பினி மற்றும் தாய்மார்களுக்கும் இதே நிலைதான். ஆரம்ப கல்வியை பொறுத்தவரையில் மாணவர்களின் சேர்க்கை 95% -ஆக இருந்தாலும், சுமார் 48% எட்டாம் வகுப்பு வரும் முன்னரே படிப்பை விடுகின்றனர்.

மேலே உள்ள புள்ளிவிவரம் நம்முடைய பொருளாதார மேம்பாடு நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உட்படுத்திய ஒரு வளர்ச்சியாக (Inclusive Growth)  அமையவில்லை என்பதனை தெளிவாக்குகிறது.

சமூக, பாலின மற்றும் பிராந்திய ஏற்றதாழ்வுகள், கிராமபுற/நகர்புற வேறுபாடுகள், சொற்ப மனித மேம்பாடு, தரமற்ற வேலை வாய்ப்பு, விவசாய வளர்ச்சியில் தேக்கம் போன்றவற்றினால் நம் மக்கள்தொகையில் ஒரு பெரும் பகுதி இந்த வளர்ச்சியிலுருந்து விடுப்பட்டவர்களாய்தான் உள்ளனர்.

இப்படியான ஒரு வளர்ச்சியினால் சமூகதில் அமையிதின்மை (Social Unrest) எற்பட வாய்ப்புகள் அதிகம்.

8% அல்லது 9% வளர்ச்சியைவிட அனைத்து தரப்பினரையும் உட்படுத்திய வளர்ச்சியை அடைவது என்பது ஒரு சவால்தான். ஆனால், ஒரு நிலையான ஜனநாயக சமூக அமைப்பிற்க்கு (Stable Democratic Society) அனைத்து தரப்பு மக்களையும் உட்படுத்திய ஒரு வளர்ச்சி மிக அவசியம்.  

இல்லாவிடில், ஜனநாயகத்தில் சாமான்யனின் பங்களிப்பு என்பது கேள்விகுறியாகிவிடும்.

Sunday, October 9, 2011

ஃபேமிலி ரூம்

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வர் பொறுப்பேற்று பத்தாண்டுகள் ஆகிறது.  இந்த 'சாதனை'யை அவரது ஆதரவாளர்கள் பெருமையுடன் பறைசாற்றி கொண்டிருகிறார்கள்! இந்தியாவிலேயே மிக 'திறமை'யான முதல்வர் அவர்தான் என்கிறார்கள்!! தொடர்ந்து பத்தாண்டுகள் முதல்வராய் இருப்பது ஒரு சாதனைதான். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன் அவர் அரசாங்கம் செய்த ஒரு காரியம் அவரின் திறமையை சந்தேகிக்க வைக்கிறது - குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அதற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்ட சஞ்சீவ் பட் என்ற போலீஸ் அதிகாரியின் கைது. இந்த கைது சம்பவத்தைவிட அதற்கான காரணம்தான் மோடி அரசின் திறமையை குறைக்கிறது! அந்த அதிகாரி அவருக்கு கீழ் பணிபுரிந்த காவலர் ஒருவரை மிரட்டி தனக்கு சாதகமாக வாக்குமூலம் வாங்கினார் என்ற குற்றசாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்படியும் அந்த அதிகாரி ஜாமீனில் வந்துவிடுவார். கைது செய்து என்ன பயன்?  மோடியை பாரதீய ஜனதாவின் தோழமை கட்சிகளின் முதல்வர்களே அவர்களின் மாநிலத்தில் நுழைய அனுமதி மறுக்கும்போது தன் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நம் ‘தைரியலெட்சுமி’ தமிழக முதல்வரிடம் அவர் யோசனை கேட்டிருக்கலாம். இந்நேரம் அந்த அதிகாரி மீது கஞ்சா வழக்கு அல்லது குண்டர் தடுப்பு சட்டம், முடிந்தால் இரண்டும் சேர்ந்தே பாய்ந்து இருக்கும்.

*****

சென்ற வாரம் திருநெல்வேலி விஜயம். வேலை முடித்து திரும்பும் வழியில் சாத்தூரில் மதிய உணவிற்காக நிறுத்தினோம். எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று நாங்களே அனுமானித்து ஒரு ஓட்டலில் நுழைந்தோம். அப்போது மணி சுமார் நான்கு. மாலை சிற்றுண்டிக்கான நேரம். ஓட்டலில் திரும்பிய பக்கமெல்லாம் வடையும் ஆவி பறக்க டிக்காஷன் காபியும். அநேகமாக பலருக்கு அது ஒரு தினசரி கடமைப்போலும். ஓட்டலில் கவனத்தை கவர்ந்த மற்றுமொரு விஷயம் ஃபேமிலி ரூம்! நாங்கள் சென்ற சமயம் ஃபேமிலி ரூமில் ஒரு குடும்பம் இரு குழந்தைகள் சகிதம் உணவு அருந்தி கொண்டிருந்தது.  சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் வாடிக்கையாக செல்லும் அசைவ ஓட்டல் ஒன்றில் இதே போல் ஐந்து ஃபேமிலி ரூம்கள் உண்டு. ஆனால், ஒரு நாள்கூட அதில் ஃபேமிலிக்களை பார்த்ததில்லை! எப்பொழுது சென்றாலும் எல்லா ரூம்களிலும் நான்கைந்து பேர் மது அருந்தி கொண்டிருப்பார்கள்!! ஓட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கவனித்துவிடுவதால் ’குடி’மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நிம்மதியாகவும் செளகரியமாகவும் அவர்கள் காரியத்தை முடித்து கொள்ளலாம். நானும் நண்பர்கள் சகிதம் அடிக்கடி அங்கு செல்வது அந்த ஒரு ’திருப்பணி’க்காகதான். இப்போதெல்லாம் தெருமுனை ஒயின் ஷாப் முதல் நட்சத்திர ஓட்டல்வரை மது அருந்துவதற்கான இடம் மற்றும் இதர வசதிகள் பெருகிவிட்டது. அதனால் அசைவ ஓட்டல்களில் ஃபேமிலி ரூம்களுக்கான தேவை குறைந்துவிட்டதா அல்லது பயன்பாடு மாறிவிட்டதா?!? 

Sunday, October 2, 2011

மகாத்மா

இன்று மகாத்மா காந்தியின் 142-வது பிறந்த நாள். அவர் சமாதி மற்றும் இதர நினைவிடங்களுக்கு தலைவர்கள் விஜயம், நாடெங்கும் அவர் சிலைகளுக்கு மாலை, பிரார்த்தனை கூட்டங்கள் என்று வழக்கமான சடங்குகள்! (இதில் உண்மையாகவே அவர் மீது ஈடுபாடுடன் அவர் நினைவை கொண்டாடுபவர்களும் உண்டு.) இந்த சடங்குகளில் ஒன்று, பத்திரிக்கைகள் மற்றும் இணையத்தில் அவரை போற்றியும் அதற்கு சமமாக வசைபாடியும் வெளிவரும் கட்டுரைகள்.

ஒரு தலைவைரை பற்றியோ அல்லது அவரின் கருத்துக்களை பற்றியோ பலவித கருத்துக்கள் இருப்பது சகஜம். ஆனால் அவரை மகாத்மா என்று அழைப்பதே தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.

அதற்கு அரசியல்ரீதியான காரணங்கள் முன் வைக்கபடுகிறது! இங்குதான் முரண்பாடே.

அரசியல் செயல்பாடுகள் என்று வரும்பொழுது எந்த தலைவரும் எந்நேரமும் எல்லோரையும் திருப்திப்படும்படியான முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவருடன் அரசியலில் முரண்பட்டவர்கள் ஏராளம். அவரும் பல நேரங்களில் தவறான அரசியல் நிலைபாடினை எடுத்துள்ளார். ஆனால் ஒர் நேர்மையான அரசியலுக்கு முயற்ச்சித்தார்.

மகாத்மா என்று அவர் போற்றப்பட்டதற்கு அவரின் நேர்மையான அரசியல் வாழ்க்கை எப்படி ஒரு முக்கியமான காரணமோ அதைப்போல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிக முக்கிய காரணம். ஒழுக்கமான வாழ்வினை வாழ அவர் எடுத்த சிரத்தைகள் மற்றும் ஒளிவு மறைவு இல்லாத உண்மையான தனி மணித வாழ்க்கைத்தான் எல்லோராலும் அவர் மகாத்மா என்று போற்றப்பட்டதற்கு முக்கிய காரணம்.

இன்று ட்வீட்டரில் பார்த்தது - காந்தி சாமான்ய மக்களின் கதாநாயகன். ஆம் அறிவுஜீவிகளால் பலமாக விமர்சனம் செய்யப்பட்டபோதிலும் சாமான்யர்களுக்கு அவர் கதாநாயகன்தான்.

Sunday, September 25, 2011

சலூனும் கவர்ச்சி காலண்டர்களும்

பொதுவாக அமெரிக்கர்கள் எல்லாவற்றில்லும் அதிக ஆர்பாட்டம் செய்பவர்கள் என்பது அறிந்ததே. ஆனால், 9 / 11 அன்று உயர்யிழந்வர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் மிகவும்   கண்ணியத்துடன், பண்புடன் உணர்ச்சி வயப்படாமல் மிக அமைதியாக அனுசரிக்கப்பட்டது! இதனை நம்மூர் நிலையுடன் ஒப்பிடவும். தலைவர்கள் அல்லது ஹீரோக்கள் பிறந்த நாட்களில் அவர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இதில் இறந்த தலைவர்களின் நினைவு நாள் இன்னும் அதிக கவனம் பெரும். முடிந்த வரையில் அந்த தலைவருக்கு சாதி சாயம் பூசப்பட்டு அவரை சம்பந்தபட்ட சாதியின் தலைவராகவே ஆக்கிவிடுகிறார்கள்! இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விளைவுகளை இரண்டு வாரங்கள் முன் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் கண்டோம். உயிர் பலி, பொருள் சேதம், இரண்டு மாவட்டங்களிலும் ஸ்தம்பித்த அரசு நிர்வாகம்! தேவையா?

****

மங்காத்தா படம் பார்க்க குடும்பத்துடன் Big Cinemas சென்றோம். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு பின் சினிமா தியேட்டர் பக்கம்! டி.வியிலும் முழு படம் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. கவுண்டரில் இருந்தவர் சில்லறை இல்லாததால் டிக்கெட் இல்லை என்றும் வேறு யாராவது சில்லறை கொண்டு வந்தால் டிக்கெட் தருகிறேன் என்றார். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர் பதில் சொல்லிய  விதம் மற்றும் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்த விதம் அணில் அம்பானியின் வாரிசு டிக்கெட் கொடுத்து கொண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணியது! டிக்கட் மற்றும் இடைவேளையில் வாங்கியவை என்று மொத்தமாக ஐநூறு ரூபாய் மொய் வைக்கப்பட்டது. பஜாரில் திருட்டு சிடி விற்பவர் மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் காரணம் புரிந்தது!

****

நம் திட்ட ஆணையம் (Planning Commission) இந்தியாவில் சராசரியாக ஒரு நபரின் ஒரு நாள் வருமானம் ரூ.38 இருந்தால் உணவு, மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது! சுப்ரீம் கோர்ட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவருக்கு இலவச உணவு தானியம் வழங்குதல் சம்பந்தமாக நடைபெறும் வழக்கு ஒன்றில் இப்படி ஒரு அறிக்கையை ஆணையம் சமர்பித்துள்ளது. அரசாங்கம் பொறுப்பை தட்டி கழிக்கும் ஒரு செயல்.

****

மாதாமாதம் செய்ய வேண்டிய கடமை நிமித்தம் சலூன் பக்கம் சென்றேன். அன்று ஞாயிறு என்பதால் கடையில் சற்று கூட்டம். சிறுது நேர காத்திருப்பு தேவைப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் சமயம் என்பதால் சுற்றிலும் பேச்சு அதை பற்றியே இருந்தது. வழக்கம்போல் எதிலும் கலந்து கொள்ளாமல் வேடிக்கை  பார்த்தேன்! நேரம் போனது தெரியவில்லை. சலூனுக்கு செல்லும் போதெல்லாம் சிறு வயதில் சலூனில் பார்த்த கவர்ச்சி காலண்டர்கள் ஞாபகம் வரும். ஆனால் இன்றுவரை அவை சலூனில் தொங்கியதற்க்கான காரணம் புரியவில்லை!

Saturday, August 27, 2011

மரண அரசியல்

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சிலர் குரல் எழுப்புகின்றனர்.

மரண தண்டனை தடை செய்யபடவேண்டும் என்று பல நாடுகளில்லும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் பல காலமாக போராடி கொண்டிருகிறார்கள். உலகளவில் சுமார் நூறு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் இதற்காக பலர் குரல் எழுப்பிகொண்டிருகிறார்கள். ஆனால், இப்பொழுது இந்த விஷயத்தில் சிலர் செய்து கொண்டிருக்கும் பிரச்சாரம் மனித உரிமை சம்பந்தபட்டதல்ல. இது அரசியல். இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் செய்யப்படும் அரசியல்.

உண்மையில் யாரும் தண்டனை பெற்றவர்களுக்காக பேசவில்லை. வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்ற மக்கள் செல்வாக்கு இல்லாத அரசியல் தலைவர்களும், நெடுமாறன், சீமான் போன்ற பிரிவினை பேசுபவர்களும் இந்த பிரச்சனையில் குளிர் காய முயற்சிக்கிறார்கள். ஆக சுயநலம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்றால், பாராளுமன்ற தாக்குதலில் தண்டனை பெற்ற அப்சல் குரு, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப் ஆகியோருக்கும் சேர்த்து போராடுவார்களா? தமிழர்களுக்காக மட்டும்தான் போராட்டம் என்றால் கோவையில் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்தியவர்களும் தமிழர்கள்தானே அவர்களுக்காகவும் போராடுவார்களா?

இது போன்ற உணர்சிகரமான பிரச்சனைகளில் இனஉணர்வுகளை தூண்டுவது ஒரு அநாகரிகமான செயல். அதைதான் தமிழ் தேசிய தலைவர்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள் செய்து கொண்டிருகிறார்கள். இதற்கு பத்திரிகைகளும் தூபம் போடுகின்றன.

போர் குற்றவாளிகள் என்று இலங்கை அதிபர் மற்றும் அவர் சகாக்களை குற்றம் சாட்டுகிறோம் நாம். மற்றவர் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் இவர்களும் குற்றவாளிகள்தானே.



Thursday, July 7, 2011

வகுப்பறை சதுரங்கம்

சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதில் ஏன் இத்தனை குழப்பம்? குழந்தைகள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடிகள்? இதற்கான பதில், எல்லோரும் அறிந்த ஒரு எளிய பதில் - தனிமனித ஆணவம்! இந்த அகங்காரத்தினால், தற்பெருமையினால் தமிழகத்தில் ஆக்கபூரவம்மான பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடபடுகின்றன. இது யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இது தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு. நாம் தற்போது அந்த சர்ச்சையை தவிர்ப்போம், மற்றொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விவாதிக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? :)

சமச்சீர் கல்வி தேவையா என்பதில் இரண்டாவது கருத்து இருக்கமுடியாது. அதனை எப்படி செயல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் மாற்றுகருத்துக்கள் இருக்கலாம். சொல்லபோனால், பலவிதமான கருத்துக்களை வரவேற்று அவற்றினை விவாதித்து அதன் அடிபடையினில் ஒரு முடிவேடுபதுதான் ஒரு ஜனநாயக அரசின் சரியான அடையாளம். ஆனால், புதிய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே ரத்துசெய்தது. விவகாரத்தை உச்சநீதிமன்றம்வரை எடுத்துசென்றுள்ளது. குழந்தைகள் புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்கு செல்லும் ஒரு விசித்திர நிலையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றினை அமைத்தது. அந்த குழுவிலும் கல்வியாளர்கள் என்ற பெயரில் தனியார் பள்ளி அதிபர்களை, அதுவும் மெட்ரிக் பள்ளி அதிபர்களை நியமித்துள்ளது! இப்படிப்பட்ட ஒரு நிபுணர் குழுவிடம் நடுநிலையான ஓர் செயல்பாட்டினை எதிர்பார்க்கமுடியாது என்றே பரவலாக பேசப்பட்ட கருத்து. அது பொய்க்கவில்லை. ஆக, ஆரம்பம் முதலே சமச்சீர் கல்வி திட்டத்தினை குழி தோண்டி புதைக்கும் ஓர் முயற்சியில் இந்த அரசு இடுபடுகிறது என்ற நடுநிலையான கல்வியாளர்களின் குற்றச்சாட்டு சரி என்றேபடுகிறது.

எல்லோரும் எதிர்பார்த்ததைபோலவே நிபுணர் குழு சமச்சீர் கல்வி திட்டத்திற்க்கு எதிரான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்று அதன் அறிக்கை குற்றம்சாட்டுகிறது. அறிக்கையைப்பற்றிய கல்வியாளர்களின் கருத்தினை பார்ப்போம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு:
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவு என்று கூறும் இந்த அறிக்கை, மற்றொரு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமமான ஒன்று என்கிறது. இதுவே ஒரு முரண்பாடான்ன கருத்து. மேலும், இது கிராமபுரங்களில் தமிழ் வழியில் கற்க்கும் மாணவர்களை சிருமைபடுத்தும் செயல். தமிழ் வழியில் கற்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் எந்த வகையிலும் ஆங்கிலவழி கல்வி கற்க்கும் மாணவர்களைவிட கல்வித்திறன் குறைந்தவர்கள் அல்ல.
எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
85% மாணவர்கள் செல்லும் அரசு அல்லது அரசு மான்யம் பெரும் பள்ளிகளுக்கு பிரதிநித்துவம் இல்லை. கிராமப்புற மாணவர்களின் கற்க்கும் திறனை இவர்கள் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. எப்படியிருந்தாலும், மாணவர்களை படிக்க செய்வது ஆசிரியர்களின் வேலை.
உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது குழந்தைகளின் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்று நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார், அதுதான் உண்மையும் கூட.

இந்த கூத்துகளை கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஒரு பெரிய கூட்டமே இத்திட்டத்திற்கு எதிராக வேலை பார்க்கிறது என்பதுதான் அது. அதில், ஆங்கிலவழி பாடம் நடத்தும் பள்ளி முதலாளிகள், படித்த நடுத்தர வர்க்கம் மற்றும் நகரவாசிகள் ஆகியோருக்கு முக்கிய பங்கு என்பது ஊரறிந்த ரகசியம். இதற்கு மேல், இப்பிரச்சனைக்கு ஜாதியும் ஒரு காரணம் என்ற குற்றசாட்டும் உண்டு.

சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் எல்லோருக்கும் சமமான கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் ஒரு முறையான கல்விக்கொள்கை இல்லாதது நாம் பலவீனங்களிலேயே மிக பெரிய பலவீனம்.இதனை என்னவென்று சொல்வது?

Sunday, May 1, 2011

தெளிவு

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் தருவதில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரு சாதனை படைத்தது மதுரை மாவட்டத்தில் நடந்த ஒர் இடைத்தேர்தல். அந்த மாவட்டதில் தற்பொழுது நடந்த பொதுதேர்தலை எந்தவித சட்டவிரோதமான நடவடிக்கைகளும் இல்லாமல் நடத்தி தமிழகத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் தற்போதைய மதுரை ஆட்சியர் திரு.சகாயம்.

சமீபத்தில் மதுரை ரீடர்ஸ க்ளப் கூட்டத்தில் அவரது உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. திறமையான அதிகாரி என்பதோடு மட்டும் அல்லாமல் நல்ல பேச்சாளராவும் (Orator) உள்ளார். நிறைய மேற்கோள்கள் கூறினார். அரசு பணியில் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு நிகழ்ச்சி:

"நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி கொண்டிருந்தேன். ராசிபுரத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தேன். நெடுஞ்சாலையில் என் வாகனத்திற்க்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் சாலையில் தாறுமாறாக பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். மது அருந்திவிட்டு ஒட்டுகிறார்களா என்று நினைத்தேன். அவர்களை நிறுத்தி உதவியாளர்களைவிட்டு சோதிக்க செய்தேன். நினைததுப்போல் மது அருந்தியிருந்தனர். மேலும், ஓட்டுநர் உரிமமும் இல்லை. சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க சொண்ணேன். இருவரும் கெஞ்சினர். நான் விடாப்பிடியாக இருந்தேன். சட்டென்று ஒருவன் தன் பையிலுருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் திணித்து 'ஐயா எங்களை விட்டுவிடுங்கள்' என்றான்! ஆக எப்படி இன்றைய சூழல் உள்ளது என்று பாருங்கள்."

அவர் இந்த நிகழ்ச்சியை சற்று வேடிக்கையாகதான் விவரித்தார். ஆனால், சற்று யோசித்தோம் என்றால் நம் எல்லோரிடமும் இந்த மனபாண்மை உள்ளது தெரியும். காசிருந்தால் இந்த நாட்டில் எதையும் செய்யலாம் என்ற அதீத நம்பிக்கை. எதையும் மீறலாம் என்ற தைரியம்.

குடி போதையிலேயே இந்த தெளிவு இருக்கும்போது, தெளிவாக இருக்கும் போது.... யோசிக்கவே முடியவில்லையோ!!!!


Saturday, April 9, 2011

லஞ்ச ஒழிப்பும் நடுத்தர வர்க்கமும்

கிராம நிர்வாக அதிகாரி முதல் மத்திய மந்திரி வரை நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் என்பது மிகவும் சாதாரண விஷயம் ஆகிவிட்டது. லஞ்சம் வாங்காத அதிகாரியை அல்லது அரசியல்வாதியை பார்த்துதான் நாம் அதிசியக்கிறோம்.

இப்படிபட்ட ஓரு சூழலில் அன்னா ஹசாரே என்ற ஒரு தனிமனிதர் லஞ்சத்திற்க்கு எதிராக பேசதுவங்கினார். சென்ற வாரம், அவரின் 'சாகும்வரை உண்ணாவிரத' போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகர் வாழ் நடுத்தர மக்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்குகொண்டனர்.

லஞ்சம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட ஒரு பரபரப்பு லஞ்சத்தை ஒழிக்குமா? கண்டிப்பாக ஒழிக்காது!!

வழக்கம்போல் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில செய்திதொலைகாட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவும் கொதித்ததைப்போல் ஒரு தோற்றத்தை உருவாக்கினர்.

இந்த பிரச்சனைக்கு அன்னா ஹசாரேவும் அவரின் ஆதரவாளர்களும் தரும் தீர்வும் சரியல்ல, அதனை தேசத்தின்மேல் திணிக்கும் விதமும் சரியல்ல. இந்த கருத்தினை வலியுறுத்தும் வகையில் பல வலைப்பதிவாளர்கள் அழகாக பதிந்துள்ளனர். என்னுடைய பிரச்சனை அதுவல்ல!

இந்த லஞ்ச ஒழிப்பு போராட்டத்திற்காக வீதிகளில் குவிந்த நடுத்தரவர்க்கத்தின் நேர்மை எந்த அளவு சந்தேகமற்றது? இதுதான் என்னுடைய பிரச்சனை.




ஸபெக்ட்ரம், காமென்வெல்த் போன்றவைதான் லஞ்சஊழல் என்றால், தனிமனிதனை நேரடியாக பாதிக்கும் அடிமட்ட லஞ்சத்தை என்னவென்பது? இதில் நடுத்தரவர்க்கத்தின் பங்கு என்னவென்று எல்லோரும் அறிந்ததே! தங்கள் தனிபட்ட தேவைகளுக்காக அடிமட்டத்தில் லஞ்சத்தை ஆரம்பம் முதல் ஊக்குவிப்பது இந்த வர்க்கம்தான். பொருளாதார தாராளமயமாக்குதலுக்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது.

இரயில் டிக்கட், காஸ சிலிண்டர், மின் இணைப்பு, பிறப்பு/இறப்பு போன்ற சான்தறிதழ்கள் பெறுதல், பள்ளி/கல்லூரி அட்மிஷன்..... இப்படி எல்லாவற்றிலும் வரிசையை தாண்டுவதற்கு அல்லது விதியை மீறுவதற்க்கு லஞ்சத்தை ஆரம்பித்தது நடுத்தரவர்க்கம்தான். மீறுவதற்கு வாங்கியவர்கள் இப்பொழுது சாதாரணமாக செய்யவேண்டியதற்கே கையை நீட்டுகின்றனர். இப்பொழுது விவகாரம் தலைக்குமேல் போய்விட்டது! நேரடி பாதிப்பு அதிகமாகிவிட்டது!! தாங்கமுடியாமல் நடுத்தரவர்க்கம் வீதிகளுக்கு வந்துள்ளது. சுயநலம் என்றுகூட சொல்லாம். ஆனால், பராசக்தி பட வசனம்போல் 'சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது' என்று சமாதானபட்டுகொள்ளலாம்.

சரி, நம்மில் எவ்வளவு பேர் லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதிமொழி எடுக்கவும் அதனை தவறாமல் பின்பற்றவும் தயாராக உள்ளோம். அதிகமாக எதிர்பார்க்கிறேனோ?

லஞ்சம் ஓழிக்கப்பட வேண்டுமென்றால், 'அதனை' வாங்குபவர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, 'அதனை' கொடுக்க தயாராக இருக்கும் நம்மிடம் கடுகளவாவது வேண்டும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து.


Sunday, March 13, 2011

உள்நாட்டு அகதிகள்

சென்ற வாரம் அலுவல் நிமித்தமாக சென்னை சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் பயணம்தான். இரயில் அல்லது பேருந்து நிலையத்திலுருந்து தங்குமிடம் செல்லும் வழியில் அந்த அதிகாலைவேளையில் கண்ணில் முதலில்படுவது சாலையின் இருபுறமும் இருக்கும் நடைபாதைவாசிகள்தான். இதுபோல் கிடைத்த இடத்தில் தங்களை அடக்கிகொள்ளும் மக்களை பார்க்காமல் சென்னையில் சுற்றுவது சிரமம். எல்லா பெரிய நகரங்களிலும் இதுதான் நிலைமை. தினமும் நகரத்திற்கு பிழைப்பு தேடிவருவபர்களால் நாளுக்கு நாள் இப்படிபட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று.

முறையான சேமிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் உணவுதானியங்கள் அழுகி கொண்டிருக்கையில் அந்த உணவிற்காக புலம்பெயர்ந்தவர்கள் இவர்கள். நம் உணவின் ஊட்டச்சத்தினை கணக்கிட்டு உண்ணும் நாம், பசி அடங்கினால் போதும் என்று கிடைத்ததை உண்ணும் இவர்களுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக வசதியானவர்களே!

நகரை செம்மைபடுத்துகிறோம் என்று மாநகராட்சியினால் விரட்டபடுவது, காவல்துறையினரின் கெடுபிடிகள், சமூகவிரோதிகளின் தொந்தரவுகள் போன்ற இம்சைகளையும் மீறி இம்மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டிகொண்டுதான் இருக்கிறார்கள். முறையற்று ஓட்டப்படும் வாகனங்களால் உயிரழப்புகளும் அவ்வபொழுது உண்டு.

தற்போது எட்டு சதவீத வளர்ச்சி, அடுத்த ஆண்டு ஒன்பது சதவீத வளர்ச்சியை தொட்டுவிடும் என்கிறார்கள், இருந்தும் இப்படிபட்ட ஒர் நிலை! எதனால்? இதனை சரி செய்வது எப்படி? இந்த கேள்விகளுக்கான ஆராய்ச்சியில் நான் ஈடுபடவில்லை. அதனை, மெத்த படித்த பல அறிஞர்கள் நிறையவே செய்துகொண்டிருகிறார்கள்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதும் இல்லாத காரணத்தால் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பெற தகுதியவற்றவர்கள் ஆகிறார்கள். இந்நாட்டின் பிரஜை என்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கிறார்கள்.

Sunday, February 27, 2011

இதயத்துடிப்பு

இதயம் என்பது மனிதனின் முக்கிய உறுப்புக்களில் ஒன்று என்பது அறிந்ததே. அது செயல்படும் முறை மிகவும் துல்லியமானது என்பதும் அறிந்ததே.

இதயம் பற்றிய அடிப்படை தகவல்களை மிகவும் எளிமையாக புகழ்பெற்ற இருதய நிபுனர் டாக்டர் கே.எம்.செரியன் அவரது வலைப்பதிவில் பதிந்துள்ளார்.

அதன் தமிழாக்கம்...
(இந்த மொழிபெயர்ப்பு அவரின் ஒப்புதலுடன் தரப்பட்டுள்ளது)


1. இதயம் எப்படி இயங்குகிறது?
  • இதயம் ஒர் நிமிடத்திற்க்கு 70 - 80 முறை துடிக்கின்றது. நாள் ஒன்றுக்கு 1,00,000 முறை.
  • அது நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்பகுதியில் அட்ரியா (Atria) எனப்படும் இரண்டு அறைகள். கீழே வென்ட்ரிக்ல்ஸ (Ventricles) எனப்படும் இரண்டு அறைகள்.
  • உடலில் உள்ள அனைத்துப் பாகங்களில் இருந்தும் அசுத்த இரத்தமானது இதயத்தின் வலப்பகுதிக்கு வருகின்றது. இதயத்தின் இடப்பகுதி நுரையீரலில் (Lungs) இருந்து சுத்தப்படுத்தப்பட்ட இரத்தத்தினை பெற்று உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.
  • இதயத்தின் வலப்புறமும் இடப்புறமும் செப்டம் (Septum) என்றழைக்கப்படும் தடுப்பினால் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இரத்த ஓட்டம் பின்வாங்குவதை (Back Flow) தவிர்க்க இதயத்தில் நான்கு வால்வுகள் (Valves) உள்ளன.
  • இரண்டு முக்கிய இரத்த நாடிகள் (Blood Vessels) உள்ளன. ஒன்று, இதயத்தின் வலப்பகுதியில் இருந்து நுரையீரலுக்கு அசுத்த இரத்தத்தினை கொண்டு செல்கிறது. மற்றொன்று, இதயத்தின் இடப்பகுதில் இருந்து சுத்தமான இரத்தத்தினை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.
  • இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்த நாடிகள் இதய நாடிகள் (Coronary Arteries) என்றழைக்கப்படுகின்றன.

2. உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றால் என்ன? அதற்கு என்ன சிகிச்சை முறை?
  • மிக சிறிய நாடிகள் இறுக்கமாகுவதால் ஏற்படுவது உயர் இரத்த அழுத்தம்.
  • உப்பு குறைவான உணவுமுறை, முறையான உடற்பயிற்சி, மனஅழுத்தத்தை கட்டுபடுத்துதல் மற்றும் சரியான உடல் எடை மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.
  • மேற்கூறியவற்றால் இரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

3. இரத்த கொழுப்பு (Cholesterol) என்றால் என்ன?
  • இரத்த கொழுப்பு என்பது கல்லீரலில் (Liver) உற்பத்தியாகும் ஒரு வகையான கொழுப்பு சத்து(Fat). இது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் காணப்படும்.
  • கொழுப்பு சத்து இரண்டு வகைப்படும் - பூரிதக் கொழுப்பு (Saturated) & அபூரிதக் கொழுப்பு (Unsaturated).
  • இதில் பூரிதக் கொழுப்பு அதிக தீங்கானது. இது மாமிசம், பால் மற்றும் முட்டை போன்ற உணவு வகைகளில் காணப்படுகிறது. பூரிதக் கொழுப்பு நமது நாடிகளை அடைக்க செய்யவதுடன் மொத்த கொழுப்பு மற்றும் LDL அளவினை அதிகரிக்க செய்யும். கூடியவரை இவற்றை தவிர்க்கவும்.
  • கொழுப்பு புரதம் (Lipoproteins) கொழுப்பினை இரத்த ஓட்டத்தில் சுமந்து செல்கிறது.
  • இரண்டு முக்கிய கொழுப்பு புரதங்கள் - எச்.டீ.எல் (HDL) மற்றும் எல்.டீ.எல் (LDL).
  • இவற்றில் HDL நலம் பயக்கும் ஒன்று. LDL கெடுதல் விளைவிக்ககூடிய ஒன்று.
  • ஆலிவ் எண்ணெய் (Olive Oil) மற்றும் சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil) ஆகியவற்றில் HDL காணப்படுகிறது. (இவற்றில் LDL குறைவாக இருக்கும்)

4. நாடி-உட்படிவு (Atherosclerosis) என்றால் என்ன?
  • நாடி-உட்படிவு என்பது இரத்தக் கொழுப்பு மற்றும் இதர கொழுப்பு சத்துகள், சுண்ணாம்புச்சத்து (Calcium) மற்றும் இரத்தக் கட்டிகளுடன் (Blood Clot) சேர்ந்து நாடிகளுக்குள் படிதல்.

5. அடைப்பட்ட நாடிகளுக்கு மாற்று-வழி இணைப்பறுவை (Bypass Surgery) அல்லாத வேறு சிகிச்சை முறைகள் என்ன?

மாரடைப்பு அபாயத்தினை தடுக்க கடுமையாக சுருங்கிய இதய நாடிகளுக்கு சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சை அல்லாத வேறு சிகிச்சை முறைகள்:
  • குருதிக்குழாய்ச் சீரமைப்பு (Angioplasty) - காற்றூட்டபட்ட பை (Balloon) மூலம் சுருங்கிய இரத்த நாடியினை அகட்டுவது (Dilatation).
  • ஸட்ன்ட் (Stent) - குருதிக்குழாய்ச் சீரமைப்புக்கு பின், நாடி சுருங்கிய பகுதியில் வலைக்கண் (Mesh) அல்லது சுருள் (Spring) போன்ற உலோக சாதனம் பொருத்துதல். இது நாடி குலைவதை தடுக்கிறது.

6. குருதி ஊட்டக்குறை (Arrhythmia) என்றால் என்ன?
  • குருதி ஊட்டக்குறை என்பது இதயத்தின் மின் செயற்பாடு குழம்புவதால் ஏற்படும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்.

7. மின் உடலியங்கியல் ஆய்வு (Electro Physiology Study - EPS) என்றால் என்ன?
  • மின் உடலியங்கியல் ஆய்வு என்பது இதய கேத்தடரைசேக்ஷன் நுட்பம் (Cardiac Catheterization Technique) மூலம் குருதி ஊட்டக்குறை உள்ள நோயாளிகளை பரிசோதித்தல்.

8. அலைவரிசை மூலம் உறுப்பு-நீக்கம் (Radio Frequency Ablation - RFA) என்றால் என்ன?
  • அலைவரிசை மூலம் உறுப்பு-நீக்கம் என்பது குருதி ஊட்டக்குறைக்கான குறுக்கிட்டு (Interventional) சிகிச்சைமுறை.

9. இதய முடுக்கி (Pacemaker) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
  • இதய முடுக்கி என்பது இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி. மேலும், இதயத்தில் மின்துடிப்புகளை உண்டுபண்ணுதல் மூலம் இரத்தம் சீராக மற்ற பகுதிகளுக்கு வெளியேற (Pump) செய்கிறது.

10. இதய இரத்த குழாய் வரவி (Coronary Angiography) என்றால் என்ன?
  • இதய இரத்த குழாய் வரவி என்பது இதயத்தின் இரத்த வரத்தினை ஆய்வதற்காக செய்யப்படும் ஓர் நோய் கண்டறியும் சோதனை (Diagnostic Test) . இந்த சோதனைக்காக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்ச்சியின்மை (Local Anaesthesia) ஏற்படுத்தப்படுகிறது.
  • தொடை அல்லது கையில் உள்ள இரத்த நாடி ஒன்றில் சிறிய குழாய் (Catheter)செருகப்படுகிறது. இதன் மூலம் இதய நாடிக்குள் சாயம் செலுத்தப்படும்.

11. பிறவி இதய நோய் (Congenital Heart Disease) என்றால் என்ன?

பிறவி இதய நோய் என்பது பிறக்கும்பொழுது இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை குறிப்பிடுகிறது.
  • இதய அறைகளுக்கு இடையே உள்ள தடுப்பினில் (செப்டம்) உள்ள துளைகள்.
  • சுருங்கிய வால்வுகள் அல்லது இரத்த நாடிகள்.
  • இதயத்துடன் இணைந்த இரத்த நாடிகள் சரியான இடத்தில் இல்லாதது.

12. இதய முணுமுணுப்பு (Heart Murmur) என்றால் என்ன?
  • இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் பொழுது சாதரணமாக லப்-டப் என்று ஓலி எழுப்பும். இந்த ஒலி, இதற்கான கருவி (Stethoscope) மூலம் மருத்துவர்களால் கேட்கப்படும்.
  • இதைத்தவிர வேறு மிகையாக கேட்கப்படும் ஒலி, இதய முணுமுணுப்பு என்றழைக்கபடுகிறது.
  • எல்லா இதய முணுமுணுப்புக்களுக்கும் சிகிச்சை தேவையில்லை.

13. கார்டியாக் கேத்தடரைசேக்ஷன் (Cardiac Catheterization) என்றால் என்ன?
  • கார்டியாக் கேத்தடரைசேக்ஷன் என்பது இரத்த நாடி அல்லது நரம்பு மூலம் மிக நுண்ணிய குழாயினை (Catheter) இதய அறைகளுக்குள் செருகுதல் (பொதுவாக மேற்பகுதியில்). இதில், இரத்த மாதிரிகள் மற்றும் இரத்த அழுத்த அளவுகள் நேரடியாக இதய அறைகளில் எடுக்கமுடிவதால் நோயை துல்லியமாக கண்டறியமுடிகிறது.

14. இதய நோயிற்கான முக்கிய அபாயகர காரணிகள் (Risk Factors) என்ன?
  • புகைப்பிடித்தல், அதீத கொழுப்பு சத்து, அதீத இரத்த அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, பருத்த சரீரம் (Obesity), சர்க்கரை நோய், முதுமை, ஆணினம் மற்றும் குடும்ப மரபு (Heredity). பெண்களுக்கு மாதவிடாய் நின்றப்பின்.

15. இதய எதிரொலிப் படம் (Echocardiogram) என்றால் என்ன?
  • இதய எதிரொலிப் படம் என்பது வலியற்ற, துளையிடுதல்-இல்லாத (Non-invasive) ஒர் சோதனை. இது ஊடொலி (Ultrasound) மூலம் இதயத்தின் கட்டமைப்பு (Structure) மற்றும் செயலினை ஆராய்கிறது.

16. மன அழுத்த பரிசோதனை (Stress Test) என்றால் என்ன?
  • மன அழுத்த பரிசோதனை என்பது இதய நாடி நோயினை (Coronary Artery Disease) கண்டறியும் பரிசோதனை.
  • நடைபயிற்சிக்கான இயந்திரத்தில் (Tread Mill) நடக்கவிடப்பட்டு, ஈசிஜீ(ECG), இரத்த அழுத்தம் (BP) மற்றும் இதய துடிப்பு (Heart Rate) தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

17. தாலியம் மன அழுத்த பரிசோதனை (Thallium Stress Test) என்றால் என்ன?
  • தாலியம் மன அழுத்த பரிசோதனை என்பது ஒருவகையான அணுச்சோதனை (Nuclear Test). நாடியில் இரத்த ஓட்டத்தை தெளிவாக பார்ப்பதற்கு கதிரவீச்சு தன்மைகொண்ட பொருள் (Radioactive Substance) இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படும்.
  • மருத்துவர்கள், இதய தசைப்பகுதிகளுக்கு இரத்தம் குறைவாக வருதல், அவை சேதமடைந்த நிலை அல்லது உயிரற்று இருத்தல் போன்றவற்றை பார்க்கலாம்.

18. ஈஈசிபி (Enhanced External Counter Pulsation) என்றால் என்ன?
  • ஈஈசிபி என்பது இதய நோயாளிகளுக்கு துளையிடுதல்-இல்லாத ஓரு புதுமையான சிகிச்சைமுறை.

19. ஸபைக்மோகார் (Sphygmocor)என்றால் என்ன?
  • மத்திய பெருந்தமனியின் இரத்த அழுத்தம் (Central Aortic Blood Pressure) மற்றும் மத்திய நாடிகளின் விறைப்பு (Central Arteries' Stiffness) ஆகியவற்றை துளையிடுதல்-இல்லாமல் அளக்கும் முறை. இது, இதய நாடி நோய் பாதித்த நபர்களுக்கான ஓர் பரிசோதனை.




Wednesday, February 9, 2011

ஜோதிடமும் அறிவியலும்

ஜோதிடம் என்பது அறிவியலா?

உலகமெங்கும் உள்ள அறிஞர்கள் மத்தியில் காலம்காலமாக அலசப்பட்டு வரும் ஓர் சர்ச்சை இது. பல உலக விஞ்ஞானிகள் - இந்திய விஞ்ஞானிகள் உட்பட- ஜோதிடம் அறிவியல் அல்ல என்கின்றனர்.

ஆனால், நமக்கு ஜோதிடம் என்பது அறிவியல்தான்!

இதனை, சில தினங்களுக்கு முன் மும்பை உயர்நீதிமன்றம் ஓர் வழக்கில் ஊர்ஜிதபடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது பிரச்சனையல்ல. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் காலம்காலமாக சமூகத்தில் ஊறிபோன நம்பிக்கைகள், குறிப்பாக மதரீதியான நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு முடிவெடுப்பது சரியா?

சரியல்ல... கண்டிக்கதக்கதும்கூட என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

ஆனால், சமீபத்தில் தேசிய அளவில் கவனிக்கபட்ட வழக்குகளில் எல்லாம் - அயோத்தி பிரச்சனை, சேதுகால்வாய் திட்டம் - இதுதான் நிலைமை!

ஒன்று, இந்த கேள்வி நீதிமன்றத்தின் ஆட்சி எல்லைக்குள் (jurisdiction) இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம். அல்லது, நிபுணர் குழு ஒன்றினை அமைத்து அதன் கருத்தினை கேட்டிருக்கலாம்.

சரி, ஜோதிடம் அறிவியலா?

இதற்கு விடை காண்பதற்கு, முதலில் அறிவியல் என்றால் என்ன என்றும், அந்த விளக்கத்தில் ஜோதிடம் பொருந்துகிறதா என்றும் பார்ப்போம்.

அறிவியல் என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

தத்துவமேதை அரிஸடாடில் தரும் எளிமையான விளக்கம்:
"அறிவியல் அறிவு என்பது தர்க்கரீதியாக நிலைநாட்டக்கூடிய பகுத்தறிவுடன் விளக்ககூடிய ஓர் நம்பகமான ஞானம்"

வீக்கிப்பீடீயாவின்படி:
"அறிவியல் என்பது உலகைப்பற்றிய அறிவுபூர்வமான தகவல்களை, பரிசோதிக்ககூடிய விளக்கங்களாக உருவாக்கும் ஓர் முயற்சி"

இவற்றில் "தர்க்கரீதியாக நிலைநாட்டுதல்" "பகுத்தறிவுடன் விளக்குதல்" "பரிசோதிக்ககூடிய விளக்கங்கள் " "நம்பகமான " போன்றவை கவனிக்கபடவேண்டியவை.

மேலே முனைப்பாக காட்டபட்டுள்ள எதனுடனும் ஜோதிடம் ஒத்துப்போவதாக என் அறிவுக்கு புலப்படவில்லை! உங்களுக்கு?

ஆக, நீதிமன்றம் "தர்க்கரீதியாகவோ" அல்லது "பகுத்தறிவுடனோ" செயல்படவில்லை.

மக்கள், குறிப்பாக பாமர மக்கள் நீதிமன்றங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இது நீதிமன்றங்களின் பொறுப்பினை கூடுதலாக்குகிறது. இது போன்ற தீர்ப்புக்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இவை நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளிகளே...

THATS ALL YOUR HONOR...

முக்கியச்செய்தி: ஜாதகப்படி எதிர்காலம் சரியாக இருக்கும் குழந்தைகளுக்குதான் சத்துணவு, இலவசக்கல்வி போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படவேண்டும் என்று மத்தியப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். இது எப்படி இருக்கு?

Wednesday, February 2, 2011

One Death: Multiple Rites

A Tamilnadu fisherman has been killed in the high seas for allegedly violating the international boundary. This is a second incident within a month. It is estimated that more than five hundred fishermen from Tamilnadu have been killed since the ethnic conflict erupted in the island nation. And as usual the latest killings too have been added to the official statistical data.

The killings have activated a series of reactions and the same have been on expected lines. Central & state governments issuing statements, external affairs ministry sending its emissary to Colombo, opposition crying foul, visit to bereaved families by political leaders, governments & political parties offering compensation and of-course Srilanka denying the role of its armed forces.

During the height of the conflict, it was habitual for Srilanka to accuse Indian fishermen of assisting the militants to smuggle their requirements and our men denying it vehemently. And on many instances, the over stretched navy over reacted. It viewed with suspicion even inadvertent violations or intrusions. But what's weird is the continuation of the attacks & killing of Indian fishermen even after the war coming to an end.

A lot has been said & discussed on various forums over the years. Every time after such a tragic incident, everyone who matters (or who think of themselves like that) - Politicians, Media, Intelligentsia, Film Industry & Tamil Nationalist Movements - act in a way that outperforms a well rehearsed play.

In this unfortunate saga, politicians are the most evil lot. The two big Dravidian parties DMK & ADMK take a stance depending on their political position, particularly their relationship with Congress, which always downplays these incidents.

Both PMK (Its founder Ramadoss is busy bargaining electoral seats for the forthcoming assembly elections) and VCK (Its leader Thol.Thiruma who went on fast unto death during the final stages of Eelam war is mysteriously silent now) act per their political compulsions.

MDMK is one party that conducts itself with some consistency irrespective of its alliance. DDMK is more interested in its tirade against DMK. Left parties, as usual, are a confused lot.

It is most unfortunate that BJP a major national party has never bothered to have a view in this problem. It is only now its showing some interest. Maybe, it is preoccupied with more "vital" issues like Ram Mandir, Afzal Guru, Lal Chowk and so on.

Next comes our celebrated media. The regional media, both the print and the electronic, have become more or less submissive to the ruling combine, with few exceptions. For the national media, particularly the electronic media, India ends with Vindhya ranges. Have you noticed even for the movie reviews its only Bollywood, no regional cinema. It was 24x7 throughout a week for the Obamas but a mere cursory mention on these unfortunate deaths.

Intelligentsia in Tamilnadu just pays lip service. In a recent article, the eminent historian Ramachadra Guga noted about the intellectuals' commitment to Naxal cause, "Intellectuals in cities, leading bourgeois lives among so many poor, sublimate their guilt by effusively & excessively endorsing the armed rebel". I feel our intellectuals try to "sublimate their guilt" in this issue by just penning poems. Moreover they are a divided house with inflated ego & colored views.

The most intriguing part is the explicable silent of the Tamil filmdom. But we shall not find fault with them, after all they are just poor ENTERTAINERS. From day immemorial, entertainers are supposed to keep the throne in good humor. And the tradition is being followed in letter & spirit. Kollywood always find time and the requisite energy to satisfy the king.

What is most baffling is the little - or for that matter - no action by the so called Tamil Nationalists. The very same leaders who made so much during the Eelam war have vanished into nowhere. But, I always have doubt over their sincerity on any Tamils' cause.

With the lives of 500+ families being shattered in the last twenty five years the fishermen of Tamilnadu are fast loosing faith in the system, if not lost already.

Eventually, as the bereaved families perform the last rites, both the polity & the civil society perform rites of their own that suits their agenda.

P.S: In the latest incident, Tamilnadu CM has met the PM. External Affairs Secretary visited Colombo as PM's special envoy. Both Governments have decided to take required steps. Political leaders have visited the bereaved family. Compensation made. With rites being over, the routine resumes.

Thursday, January 20, 2011

என் இனிய தமிழ்மக்களே...




பாரதிராஜா என்ற கலைஞனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ் திரையுலகில் ஒரு புதிய பாணியை ஏற்படுத்தியவர். நம் கிராமங்கள், அங்கு வாழும் மக்கள், அவர்தம் சுகம், துக்கம், வீரம், காதல்... என கிராமிய வாழ்க்கையை வெகு யதார்த்தமாக திரையில் பிரதிபலித்தவர் இந்த இயக்குனர் இமயம்.

சினிமாவிற்கு அப்பால் தமிழையும், தமிழ் மண்ணையும் மிகவும் நேசிப்பவர். 'தமிழன் தலைநிமிர்ந்து வாழவேண்டும்' என்ற கொள்கையில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்.

சரி விஷயத்திற்கு வருவோம்...

சமீபத்திய ஆனந்த விகடனில் அவரின் காரசாரமான பேட்டி ஓன்று வெளியாகியுள்ளது. சினிமா, அரசியல், ஈழம் என அனைத்திற்க்கும் சரவெடி போன்ற பதில்கள். தமிழ்நாட்டில் தமிழனுக்கு 'வேல்யூ' இல்லை என்று ஆதங்கபட்டுள்ளார்.

பேட்டியின் சில துளிகள்:

'இங்கே எங்கேய்யா இருக்கான் தமிழன்? There is no Tamilan in Tamilnad'

'I love my people. I love my soil. I love my language'

ஆரம்பம்முதலே அவரின் அனைத்து பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் ஆங்கில நெடி சற்று தூக்கலாகதான் இருக்கும்.

வேற்று மொழி வார்தைகள் கலக்காமல் ஓரு மொழியை தற்போதைய சூழலில் பேசமுடியாது என்பதை ஓப்புக்கொள்கிறேன்.

தமிழையும், தமிழ் பேசும் மக்களையும் பெரிதும் நேசிப்பவர் பேட்டியில் ஏன் இப்படி ஒர் ஆங்கிலக் கலவை, என்பதுதான் என் தீராத சந்தேகம் :)

ANYWAY...LONG LIVE TAMIL.....


Friday, January 7, 2011

Telangana - Development or Politics?

Telangana statehood demand is a long pending crisis in Andhra politics. Even a cursory peep into the history of Andhra and its demography will reveal how this problem is kept pending due to lack of matured leadership.

Andhra Pradesh (AP) is the fifth largest State having an area of 275,909 sq. kms and a population of about 75-80 million. Andhra Pradesh consists of three distinct regions, namely, Andhra, Rayalaseema and Telangana. Andhra and Rayalaseema were part of Madras province of the British empire. For approximately 400 years, Telangana was part of Hyderabad State, an independent kingdom ruled by Muslim Qutub Shahi and Nizam dynasties. Andhra and Rayalaseema were separated from Madras State in 1953. Andhra state (Andhra and Rayalaseema) was the first state that was formed purely on linguistic basis. Later, Teleangana was merged with Andhra in 1956, and thus the present state of Andhra Pradesh was formed with Hyderabad as the capital city.

This has resulted in two major agitations: Jai Telangana in 1969 and Jai Andhra 1972, both for separate states. Finally, a political settlement was arrived in 1973 with a six point formula. The peace was shortlived and the Telangana movement gained momentum during 1990s with BJP promising a separate statehood. Nothing materialized as its coalition partner TDP was against it. The crisis has taken a lot of turns and twists from then onwards, with each political party playing its own cards. Finally, the Central Government formed the Srikrishna Committee to look into the crisis.

The committee has submitted its report. The report is very exhaustive with vast data. It suggests six options with their pros & cons, recommending the best viable among the six. The same is in public domain now and much discussion have been made on it. The proponents of separate statehood has outrightly rejected the recommendations. TRS, BJP & TDP did not participate in the meeting where the report was made public. Thus the tangle remains.

Telangana is the largest region of the three with around 40% of state's population. It contributes about 76% to the state's revenues. Injustices in water sharing, imbalanced budget allocation and poor representation in jobs are the major grievances cited by the advocates for separate statehood. They argue that all the agreements, formulas, plans, etc in the last 50 years have not been fulfilled.

The grievances of Telangana region may be genuine. But, will a separate statehood address them is disputable. I feel, a non-political issue would have remained a one but for the politicization of it by the political parties. As usual, the parties are indulging in vote bank politics. A development related issue has been made into a political one by the short sighted politicians. With the crisis evolving into a political one, the need of the hour is a matured political leadership at all levels to resolve the same. And sadly we miss it.